
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காண்டல்பர் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த யாத்திரையின் பால்டல் பாதையில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் யாத்ரிகர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகள் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மேல் இரயில்பத்ரிக்கு அருகிலுள்ள இசட் மோடில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பால்டல் பாதையில் கீழ்நோக்கி யாத்திரையை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது மண் சரிந்து புனித குகைக்கு அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பெண் யாத்ரீகர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
காயமடைந்த யாத்ரீகர்களுக்கு பால்டல் பாதைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் இறந்த பெண் யாத்ரீகர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாரா ராம் மனைவி சோனா பாய் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து புனித குகையை நோக்கிய பயணத்தில் அதிகாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நிலைமை மீண்டும் சீரான நிலைக்குத் திரும்பிய பிறகே யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திடீர் நிலச்சரிவு குறித்து காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறுகையில், “தொடர் கனமழை காரணமாக தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆகையால் 2 அடிப்படை முகாம்களில் இருந்து இன்று புனித குகை நோக்கிச் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது. இருப்பினும் நேற்றைய இரவு பஞ்ச்தர்னி முகாமில் தங்கியிருந்த யாத்ரீகர்கள் மட்டும் மலைமீட்புக் குழுவுடன் பால்டலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று பகலில் நிலவும் வானிலையைப் பொறுத்து, நாளை அமர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்படது. இந்த யாத்திரையின் முதல் 14 நாட்களில் 2,47,313-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு யாத்ரீகர்களின் அமர்நாத் யாத்திரையை பாதித்துள்ளது.