ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் யாராவது செயல்பட்டால், எங்களின் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் வியக்க இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒன்று எட்டு மாதங்களாக நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர், மற்றொன்று 2 வருடங்களாக நடைபெறும் ரஷ்யா உக்ரைன் போர். இரண்டு போர்களிலுமே பொதுமக்கள், அதிகாரிகள் என பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டது. இருப்பினும் போர் முடிந்தப்பாடு இல்லை.
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மெனி, இங்கிலாந்து போன்ற சில நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. ரஷ்யா மிகப்பெரிய நாடு என்பதால், அணு ஆயுதங்களுக்கும் வீரர்களுக்கும் பஞ்சமே இல்லை. அந்தவகையில் ரஷ்யா மீது உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதில் உக்ரைன், ஜெர்மனி நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அது ரஷ்யாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ரஷ்யாவிடம் இருக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உக்ரைனிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. ஆகையால்தான் ரஷ்யா தைரியத்துடன் இத்தனை வருடங்களாகப் போர் செய்து வருகிறது. தற்போது ஜெர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியது ரஷ்யாவை எதிர்ப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது. ஆகையால், ரஷ்யாவின் கவனம் ஜெர்மனி பக்கம் திரும்பியுள்ளது.
இதனையடுத்து தற்போது ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், “ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது, ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கை. மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை, வேறு சில நாடுகளுக்கு ரஷ்யாவால் வழங்க கூடும்.
ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட உக்ரைன், ஜெர்மனியின் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது. எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தெரிய வந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றார்.
ரஷ்யாவின் சில பகுதிகள் மீது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் சமீபத்தில் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.