
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 3-ம்தேதி) நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. சமானிய மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைந்தும், சில பொருட்களுக்கு வரி இல்லாமலும், அதேநேரம் சில பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளன. அதிலும் ஜிஎஸ்டி கட்டமைப்பானது sin goods எனப்படும் ‘பாவப் பொருட்கள்’ மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரி என்ற புதிய அடுக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
sin goods எனப்படும் பாவப் பொருட்கள் மீதான வரியைச் சிலர் sin tax அதாவது பாவ வரி எனச் சொல்ல என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.
‘பாவப் பொருட்கள்’ என்பது பொதுவாக சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் பொருட்கள், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இதில் மது, குட்கா, பான், புகையிலை, ஆன்லைன் சூதாட்டம், கேமிங் தளங்கள், அதிக கொழுப்பு அல்லது சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட உணவுப் பொருட்கள் போன்றவை அடங்கும். இவை உடலுக்கு தீங்கானது என்பதால் இத்தகைய பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு கூடுதல் வரியை விதித்துள்ளது. ‘பாவப் பொருட்கள்’ தவிர, அதி-ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பொருட்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி அடுக்கான 28 சதவீத வரியுடன் கூடுதல் இழப்பீட்டு வரி (Compensation Cess) விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இழப்பீட்டு வரி நீக்கப்படுவதால், அதற்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
* பான் மசாலா, குட்கா, பான் மசாலா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி, சுருட்டு உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
* கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 40% ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக இத்தகைய பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 350 சிசி-க்கு மேல் மோட்டார் சைக்கிள்கள், 1,200 சிசி-க்கு மேல் பெட்ரோல் கார்கள் அல்லது 1,500 சிசி-க்கு மேல் டீசல் கார்கள், அதே போல் பயன்பாட்டு வாகனங்களுக்கும் (SUVகள், MPVகள் போன்றவை), படகுகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்கள் (ஹெலிகாப்டர்கள் உட்பட),மற்றும் பந்தய கார்கள் போன்ற அதி-ஆடம்பரப் பொருட்களும் இந்த வரி விதிப்பில் அடங்கும்.
* நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.
* குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது. அதில் ஆன்லைன் கேமிங், ஆன்லைன் சூதாட்டம், பந்தயம், லாட்டரிகள், குதிரை பந்தயம், கேசினோக்கள், பந்தய கிளப்புகள், சில விளையாட்டு நிகழ்வுகளுக்கான சேர்க்கைகள் அதில் அடங்கும்.