சீனா உலகையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஆம்! 10ஜி இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவையே மிஞ்சும் அளவிற்கு புது புது விஷயங்களை செய்து அசத்தி வருகிறது. உலக நாடுகள் போரில் கவனம் செலுத்தி அப்பாவி உயிர்களை எடுத்து வரும் சமயத்தில், சீனா சத்தமில்லாமல் முயற்சிகளை மேற்கொண்டு பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
அப்படித்தான் தற்போது அதிவேக இன்டர்நெட் சேவையான 10ஜி இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய போன்ற நாடுகளில் 4ஜிதான் சாதாரண மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதற்கடுத்து 5ஜியை பலரும் தற்போதுதான் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், சீனா எட்டா உயரத்திற்கு சென்றுள்ளது.
இந்த அதிவேக இணைய சேவை, நொடிக்கு டெராபிட் கணக்கில் டேட்டாக்களை பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது. இதன்மூலம், திரைப்படங்கள் மற்றும் பெரிய அளவிலான ஜிபிக்களை கண்ணிமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, தன்னாட்சி வாகனங்கள், தொலை மருத்துவம் மற்றும் மேம்பட்ட தொழிற்சாலை ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 10ஜி தொழில்நுட்பத்தின் மூலம், இணைய பயன்பாடு புதிய பரிமாணத்தை எட்டும். தாமதமில்லாத இணைய அனுபவம், மேம்பட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி பயன்பாடுகள் சாத்தியமாகும். மேலும், இது எதிர்கால இணைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இதன் முதற்கட்டமாக சீனாவின் பீஜிங் அருகே, ஹூபே மாகாணத்தில் உள்ள சுனான் கவுண்டி என்ற பகுதியில், 9,834 எம்பிபிஎஸ்(Mbps) வேகத்தில் பதிவிறக்கம் மற்றும் 1008 எம்பிபிஎஸ்(Mbps) பதிவேற்றும் திறன் கொண்ட 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேறு பகுதிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுமாம்.
உலக நாடுகள் மத்தியில் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்குவதில் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பமான 50G PON (Passive Optical Network) கட்டமைப்பில் இந்த 10ஜி சேவை வழங்கப்படுகிறது.
சீனாவின் இந்த அசாதாரண சாதனை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சீனா, தற்போது 10ஜி மூலம் தனது தொழில்நுட்ப ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் வணிக ரீதியாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.