

மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேரை இந்திய அதிகாரிகள் அடையாளம் கண்டு, தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். இதுவரை அவர்கள் யாரிடமும் நிபா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும்.
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் பயண கட்டுப்பாடுகளோ வர்த்தக கட்டுப்பாடுகளோ எதுவும் விதிக்க தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உண்மையில் நிபா வைரஸ் என்பது சாதாரண தொடர்பு, காற்று, நீர் அல்லது நன்கு சமைக்கப்பட்ட உணவு மூலம் பரவாது. இது கோவிட் 19 போல காற்றில் பரவக்கூடியது அல்ல. இதனால் நாடு தழுவிய நெருக்கடிகள் எதுவும் இல்லை என்பதே உண்மை. நிபா வைரஸ் என்பது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு மாசுபட்ட உணவு அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் ஒரு விலங்கு வழி நோயாகும். இது காய்ச்சல் மற்றும் மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருக்கும் என்றும், இது மனிதர்களிடையே பரவக்கூடும் என்றாலும் அவ்வளவு எளிதில் பரவாது என்றும் கூறப்படுகிறது.
நிபா வைரஸுக்கு காய்ச்சல், தலைவலி, தசை வலி, தொண்டை வலி அல்லது இருமல், சோர்வு, குமட்டல், வாந்தி வலிப்புகள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் தென்படும். தற்பொழுது நிபா வைரஸுக்கு என்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ, சிகிச்சை முறைகளோ எதுவும் இல்லை. இருப்பினும் பல மாற்றுகள் பரிசீலனையில் உள்ளன.
நிபா வைரஸ் என்பது அரிதான ஆனால் கடுமையான ஜுனோடிக் தொற்றாகும். இது முதன் முதலில் 1998 ஆம் ஆண்டில் மலேசியாவில் கண்டறியப்பட்டது. அப்பொழுது பன்றி வளர்ப்பவர்களிடையே பரவலான இந்நோய் குறிப்பிடத்தக்க உயிரிழப்பை ஏற்படுத்தியது. 2001 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் நிபா வைரஸ் பரவலை மேற்கு வங்காளத்தில் பதிவு செய்தது. பிறகு மீண்டும் 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் பதிவு செய்யப்பட்டது. இத்தொற்று பெரும்பாலும் பொதுவான வைரஸ் நோய்களைப் போலவே இருக்கும் பொதுவான அறிகுறிகளுடன் இருப்பதால் இதன் ஆரம்பகால கண்டறிதல் என்பது சவாலானதாகவே உள்ளது.