புகழ்பெற்ற ஆங்கில நாளேடான "தி எகனாமிஸ்ட்" நடத்திய ஆய்வின் முடிவில், உலகின் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில், தொடர்ச்சியாக நான்காவது முறையாக வியன்னாவை முதலிடம் பிடித்துள்ளது.
தி எகனாமிஸ்ட் நாளேடு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வாழ்வதற்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 173 முக்கிய நகரங்களை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் ஒப்பீடு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்போர்ன் நகரம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடம் வகித்து வந்தது. அதைதொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு முதன்முறையாக வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில், வியன்னா முதன்முறையாக முதலிடம் பிடித்தது.
அதோடு, இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்த முதல் ஐரோப்பிய நகரம் எனும் பெருமையையும் தனதாக்கியது. இதையடுத்து, 2019, 2022-ஐ தொடர்ந்து நான்காவது முறையாக உலகில் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரம், இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த எந்தவொரு நகரமும் இடம்பெறவில்லை.
ஆய்வு நடந்த 5 பிரிவுகளில் ஸ்திரத்தன்மை, ஆரோக்கியம், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் முழு மதிப்பெண்களை வியன்னா நகரம் பெற்றுள்ளது. கலாச்சார பிரிவில் மட்டும் 93.5 சதவிகித பங்குகளுடன் மொத்தமாக 98.4 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதைதொடர்ந்து, 98.0 மதிப்பெண்களுடன் டென்மார்க்கை சேர்ந்த கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், 97.7 மதிப்பெண்களுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்போர்ன் நகரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தலா இரண்டு நகரங்களும், கனடாவை சேர்ந்த 3 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியல்:
1.வியன்னா, ஆஸ்திரியா
2.கோபன்ஹேகன், டென்மார்க்
3.மெல்போர்ன், ஆஸ்திரேலியா
4.சிட்னி, ஆஸ்திரேலியா
5.வான்கூவர், கனடா
6.சூரிச், சுவிட்சர்லாந்து
7.கால்கரி, கனடா
8.ஜெனீவா, சுவிட்சர்லாந்து
9.டொராண்டோ, கனடா
10.ஒசாகா, ஜப்பான்
சரிவடைந்த நகரங்கள்:
இந்த பட்டியலில் சில ஐரோப்பிய நகரங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. லண்டன் மற்றும் ஸ்டாக்ஹோம் ஆகிய இரண்டு நகரங்களும் முறையே 12 மற்றும் 22 இடங்களில் இருந்து 46 வது மற்றும் 43 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த பட்டியலில் இணைந்த ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க் 35-வது இடத்தில் இருந்து 58-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ், லிபியாவின் திரிபோலி மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் உலகில் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக 2022 பட்டியலில் இருந்து காணாமல் போன உக்ரேனிய தலைநகரான கீவ், போரின் நேரடி விளைவாக உலகில் வாழத்தகுதியற்ற நகரங்களின் முதல் 10 இடங்களில் பிடித்துள்ளது.