தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களில் மழைக்காலங்களில் எலிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.100 பேர் காய்ச்சலுடன் வந்தால் அவர்களில் 38 பேருக்கு எலிக்காய்ச்சலின் பாதிப்பு இருப்பதாக இந்திய அரசின் தொற்றுநோய் கட்டுப்பாட்டுத்துறை கூறுகிறது.
‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் எலிக்காய்ச்சல் நோயை உண்டாக்குகின்றன. இவை ஸ்போரோகீட்ஸ் எனும் இனத்தைச் சேர்ந்தவை. இந்த பாக்டீரியாவில் லெப்டோஸ்பைரா இன்டிரோகன்ஸ் (Leptospira interrogans), லெப்டோஸ்பைரா பைஃபிளக்சா (Leptospira biflexa) என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் இரண்டாவது இனம் அதிக பாதிப்பினை ஏற்படுத்துவதில்லையாம்.
யாருக்கு பாதிப்பு வரும்?
விவசாயிகள்,ஆடு, மாடு வளர்ப்போர்,மீன் பிடிப்போர், கால்நடைப் பணியாளர்கள், பால் பண்ணைகளில் பணிபுரிவோர், வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர், கழிவுநீரைச் சுத்தம் செய்வோர் ஆகியோர் பொதுவாக எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நோய் பரவும் விதம் :
எலிக்காய்ச்சல் நோய்க் கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுகின்றன. சில சமயங்களில் ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற கால் நடைகளிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலமும் இக்கிருமிகள் பரவுகின்றன.
கிராமப் புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே நீர் நிலைகளில் ஊர் மக்களும் குளிப்பது உண்டு. விலங்குகளின் சிறுநீர் அதே குளத்து நீரில் கலந்திருக்கலாம். அம்மாதிரியான நேரங்களில், குளிப்பவரின் கண், மூக்கு, வாய் வழியாக நுழைந்து, அங்குள்ள சிலேட்டுமப் படலத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் நோய்க் கிருமிகள் நுழைந்து அவர்களுக்கு எலிக்காய்ச்சலை ஏற்படுத்தி விடலாம். மேலும் நமது பாதங்களில் உள்ள சிறு கீறல், சிராய்ப்புகள்,சேற்றுப்புண் வழியாகவும் எலிக்காய்ச்சல் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடலாம்.
எலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நெல் வயல்களில், வெறுங்காலுடன் வேலை செய்பவர்களுக்கும் இக்கிருமிகள் பரவும் வாய்ப்புகள் உண்டு.கால்நடை மேய்ப்பிடங்களில் காலில் செருப்பில்லாமல் நடந்தால், இக்கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. நகர்ப்புறங்களில் மழை நீர் அல்லது வெள்ளம் வடியாமல் தெருக்களில் தேங்கும் போது, வீட்டில் வாழும் எலிகள் அந்தத் தண்ணீருக்கு வரும்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும். காலில் தகுந்த பாதுகாப்பில்லாமல் மண் சகதியில் மக்கள் நடக்கும்போது, பாதங்கள் வழியாக இந்நோய்க் கிருமிகள் நமது உடலுக்குள் நுழைந்து எலிக்காய்ச்சலை ஏற்படுத்தலாம் .இக்கிருமிகள் உடலில் நுழைந்த 2லிருந்து 25 நாட்களுக்குள் எலிக்காய்சல் நோயை உண்டாக்கலாம்.
பொதுவாக இந்நோய் கடுமையான காய்ச்சல், தலைவலி, குளிர்க் காய்ச்சல், கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றி ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கலாம். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறியாகும். பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து நோய் குணமாகிவிடலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தில் பயணம் செய்து, பல்வேறு உடல் உறுப்புகளுக்கும் பரவலாம். இதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீர் பிரிவதில் பிரச்னை, கால், கை, முகம், வயிறு ஆகியவற்றில் வீக்கம்,மூளைக் காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் போன்றவையும் ஏற்படலாம்.இரைப்பை பாதிக்கப்படும்போது இரத்த வாந்தியும், குடல் பாதிக்கப்பட்டால் மலத்தில் ரத்தமும் வெளியேறும். இது இதயத்தைத் தாக்கினால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம். இந்த நோய் சிலநேரங்களில் நோயாளிக்கு மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test MAT) எலிக்காய்ச்சலை உறுதி செய்ய உதவுகிறது.இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் பரிசோதனைகளும் சில எலிக்காய்ச்சல் நோயாளிகளுக்கு தேவைப்படலாம்.
ஒருவரிடம் எலிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் தொடக்கத்திலேயே அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவரை குணப்படுத்திவிடலாம். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
வயல் வேலை, தோட்ட வேலைகளுக்குச் செல்லும்போது கை,கால்களில் முறையான பாதுகாப்பு உறைடன் செல்ல வேண்டும். குளம், குட்டை, ஊருணிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். காலணி அணியாமல் வெறுங்காலோடு நடப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டிலும் வயலிலும் எலி மற்றும் பெருச்சாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.காய்கறி, பழங்களை நன்கு கழுவிச் சுத்தம் செய்த பிறகே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
கைகளையும் பாதங்களையும் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.கை, கால்களில் சேற்றுப் புண், சிராய்ப்புகள், காயங்கள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்று குணப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புகள் நம்மை நோய்க் காய்ச்சல் அண்டாமல் பாதுகாக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவ்து நம் அனைவருக்கும் நல்லது.