

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றியதுடன், 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை வீழ்த்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் நீண்டகால ஆதிக்கத்தை தகர்த்த இந்நிகழ்வு தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக களம் கண்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வரலாற்று சாதனை படைத்தது தவெக. அதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாகி கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவளித்தது.
அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தனிப்பெரும்பான்மை நிரூபித்து தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் தமிழக அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் பங்கேற்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனை தொடர்ந்து இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, சி.விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவின் இணைந்தனர்.
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகள் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என காத்திருந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும் வருகிற 31-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக முடிவு தொடர்பாக உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இடைத்தேர்தல் தற்போது நடைபெறாது என்பதால் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அந்த இடத்தைக் கைப்பற்றத் தவெக திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியிருந்த நிலையில், புதிய திருப்பமாக ஏழாவது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏனெனில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்திருந்தாலும், கவுன்சிலர்கள் முதல் மேயர் வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவினர் மட்டுமே உள்ளனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏழாவது மாநில நிதிக்குழு, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதன் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் இல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பால் அது தள்ளிப்போனது. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் தள்ளிப்போனால் அரசியல் கட்சிகள் அதிருப்தி அடையும் சூழல் உருவாகியுள்ளது.