
தேசத்தின் சுகாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகமும், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC) சமர்ப்பித்த தரவுகள், இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்துப் மிகப்பெரிய குளறுபடிகள் இருப்பதைக் காட்டுகின்றன.
RTI மூலம் வெளிப்பட்ட உண்மை: ஒரு கணக்கு மாயம்
டெல்லியில் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் குறித்த தகவல்களைக் கோரி, ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (United Doctors Front - UDF) அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அருண் குமார் RTI மனுத் தாக்கல் செய்தார்.
அதன் மூலம்தான், NMC சமர்ப்பித்த தேசிய மருத்துவப் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையும், மாநில மருத்துவக் கவுன்சில்களில் (State Medical Councils) உள்ள உண்மையான எண்ணிக்கையும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில், இந்தியாவில் 13,86,157 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் குறிப்பிட்ட 13,86,136 என்ற எண்ணிலிருந்து, ஒரே வருடத்தில் வெறும் 21 மருத்துவர்கள் மட்டுமே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்!
ஆனால், இதே காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 80,000 மருத்துவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.
மாநிலங்களின் அதிர்ச்சி ரிப்போர்ட்: மருத்துவர் பற்றாக்குறையின் மாயை
மாநில மருத்துவக் கவுன்சில்களின் தரவுகளுடன் ஒப்பிடும்போது, NMC-இன் பதிவேட்டில் உள்ள குளறுபடி எந்த அளவு அபாயகரமானது என்பது புரிகிறது:
தலைநகர் டெல்லி: டெல்லியில் NMC பதிவேட்டின்படி 31,500-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.
ஆனால், டெல்லி மருத்துவ கவுன்சிலின் (DMC) 2020ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 72,636. ஒரே நகரத்தில் 40,000-க்கும் அதிகமான மருத்துவர்கள் NMC-இன் கணக்கிலிருந்து மாயமாகி உள்ளனர். இது 66% குறைவான கணக்கு!
கேரளா: NMC கேரளா மருத்துவ கவுன்சிலில் 73,000 பேர் இருப்பதாகச் சமர்ப்பிக்கிறது. ஆனால், மாநில கவுன்சில் உறுப்பினர்களோ உண்மையான எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்கின்றனர்—36,000 பேர் காணவில்லை.
தமிழ்நாடு: NMC 1.5 இலட்சத்திற்குக் குறைவாகச் சொல்கிறது. ஆனால், மாநில கவுன்சிலின் புள்ளிவிவரங்கள் 2 இலட்சத்துக்கும் அதிகம் என்று காட்டுகின்றன.
இந்த மிகப் பெரிய மாறுபாடு, ஒரு நகரத்தின் சுகாதாரத் திட்டமிடலையே சிதைக்கும் வல்லமை கொண்டது.
அதிக நோயாளி வரத்து கொண்ட டெல்லியில், 40,000 மருத்துவர்களைக் குறைத்துக் காட்டுவது, நாட்டில் மருத்துவர்-மக்கள் விகிதத்தின் மொத்தக் கணக்கையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
"இது ஒரு சாதாரண எழுத்தர் தவறு அல்ல. டெல்லி மருத்துவ கவுன்சிலில் உள்ள அதிகாரப்பூர்வக் கணக்கிற்கும், NMC நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கணக்கிற்கும் இடையே 41,000 மருத்துவர்கள் வித்தியாசம் உள்ளது. நாடாளுமன்றத்தில் தவறான, தவறாக வழிநடத்தும் தகவல்களைச் சமர்ப்பிப்பது என்பது நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறும் செயல் ஆகும். இது சபையின் அவமதிப்புக்குச் சமம்," என்று டாக்டர் அருண் குமார் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழல் நிறைந்த செயல்பாடுகளுக்காகக் கலைக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (MCI) மாற்றாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 2020-இல் NMC நிறுவப்பட்டது.
ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், NMC ஒரு நாட்டின் முடிவெடுக்கும் அடிப்படைத் தேவையான மருத்துவப் பதிவேட்டைப் புதுப்பிப்பதில் கூடத் தோல்வி அடைந்துள்ளது.
ஒரு கேரள மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கூறுவது போல, "NMC முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
சரியான நேரத்தில் நியமனங்கள் செய்யப்படுவதில்லை. பல முக்கியப் பதவிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக காலியாக உள்ளன.
அவர்கள் மாநில கவுன்சிலின் தகவல்தொடர்புக்குக் கூடப் பதிலளிப்பதில்லை. மாநில கவுன்சில்களில் சேர்க்கப்படும் புதிய மருத்துவர்களைத் தேசியப் பதிவேட்டில் தானாகவே புதுப்பிப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை."
தவறான மருத்துவ எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, 'மருத்துவர்கள் பற்றாக்குறை' இருப்பதாகக் கூறி டெல்லி மருத்துவக் கல்லூரிகளில் கட்டாயப் பிணைப்பு (Compulsory Bond) முறையைக் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள்.
அடிப்படைத் தரவுகளைக்கூடச் சரியாகப் பராமரிக்க முடியாத ஒரு நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் திட்டமிடல் எந்த அளவுக்குத் தவறாகப் போகும் என்று நினைத்தாலே அச்சம் ஏற்படுகிறது.
NMC எப்போது விழித்துக் கொள்ளும்? உண்மைத் தரவுகள் எப்போது வெளிவரும்?