
மருத்துவர் முகமது ரஃபி MD பொது மருத்துவர்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. (குறள் 734)
பசிக்கு உணவளிக்கும் உழவர்கள், எல்லையில் மக்களைக் காக்கும் ராணுவ வீரர்கள் இவர்களுக்கு சற்றும் குறைந்ததல்ல ஒரு நாட்டின் மக்கள் நல்வாழ்விற்கு உதவும் மருத்துவர்களின் பணி. ஆனால் மக்கள் நலம் காக்க பாடுபடும் மருத்துவர்களின் நிலையை பார்த்தால் சற்று கவலைப்படும் விதமாகவே உள்ளது. தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞான வளர்ச்சிகளின் காரணமாக இந்திய மக்களுடைய சராசரி ஆயுட்காலம் 70 வயதினைத் தாண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆயுட்காலமோ 60தில் தான் நிற்கின்றது.
இந்த நிலை மாற மருத்துவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். மக்கள் நலமும், மருத்துவர் நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்களுடைய நீண்ட வேலை நேரம், அவர்களுடைய முறையற்ற உணவுப் பழக்கங்கள், அவர்களுடைய பணிச்சுமை இவை எல்லாம் தக்க முறையில் அரசால் பொதுமக்களால், சிவில் சொசைட்டியால் கவனிக்கப்படவேண்டும். மக்கள் நலம் காக்க பாடுபடும் மருத்துவர்கள் நலமும் காக்கப்படவேண்டும்.
83 வயதாகும் டாக்டர் சுப்பிரமணியம்:
இன்றும் வைத்திய சேவை செய்து வருகின்றார். மருத்துவத்தின் பழைய காலத்தை நினைவு கூர்ந்தார்.
"நான் பயின்ற காலத்தில், மருத்துவம் மிக எளிமையாக இருந்தது. இன்று, என் மாணவர்கள் மருத்துவத் தொழில்நுட்பத்தில் வல்லவர்கள்," என்று பெருமையுடன் கூறினார்.
முதுமையில், முதுகுவலி, மூட்டு வலி போன்ற சிறு இடர்பாடுகள் அவரைப் பாதிக்கின்றன. ஆனால், அவரது மருத்துவ மாணவர்கள் அன்புடன் உதவுகிறார்கள். ஒரு மாணவர், 'சார், மருந்து சாப்பிட மறந்துடாதீங்க' என்று கூறிச் சிரித்ததை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தார். அவரது மகளும், மருமகனும் மருத்துவர்கள். அவர்கள் அவரது உணவு, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்கள்.
"என்னைக் குணப்படுத்துவது... மாணவர்களின் நன்றியும், குடும்பத்தின் அன்பும்," என்று புன்னகைத்தார்.
இந்த டாக்டர்ஸ் டேயில், அவரது கதை, மருத்துவர்களின் மனிதத்தன்மையையும், அன்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
இதய நல மருத்துவர் டாக்டர் கிரிஷ் தீபக்:
கல்கி ஆன்லைனின் இந்த மருத்துவர்களை சந்திக்கும் முயற்சியைப் பற்றி கேட்டதும் உற்சாகமடைந்தார்.
"இது மனதுக்கு உயிர்ப்பு தருது!" என்று சிரித்தார். "நள்ளிரவில், எல்லோரும் தூங்கும்போது, எனக்கு திடீர்ன்னு போன் வரும்...... 'சார், எனக்கு நெஞ்சு வலிக்குது'ன்னு. உடல் நலனை மறந்து, உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்குப் விரைவேன். பதட்டம் தொத்திக்கொள்ளும்," என்று உணர்ச்சியுடன் பகிர்ந்தார். ஆனால், "நல்ல எண்ணங்கள், இறைச் சிந்தனை என்னை உறுதியா நிறுத்துது," என்று மிடுக்காகச் சொன்னார்.
"ஒரு நோயாளி, 'டாக்டர், நீங்க என் உயிரைக் காப்பாற்றினீங்க'னு கண்ணீர் விட்டு சொல்லும் போது, சோர்வு பறந்து போகுது" என்று நெகிழ்ந்தார். மகனுடன் கிரிக்கெட் விளையாடுவது, தியானத்தில் மூழ்குவது அவரை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. இந்த டாக்டர்ஸ் டேயில், இவரது வாழ்க்கை, நல்ல எண்ணங்களும், குடும்ப அன்பும் இறை நம்பிக்கையும், நோயாளிகளின் நன்றியும் மருத்துவர்களை குணப்படுத்துவதை உணர்த்துகிறது.
டாக்டர் அழகுவேல் ராஜன்:
"பாமர மக்கள் நோயைப் புரிஞ்சிக்காம, அறிகுறிகளை அறியாம, எங்களை நாடி வராங்க," என்று கூறினார். "நாங்க அவங்களை குணப்படுத்துறோம். ஆனா எங்க ஆரோக்கியம்? அதை நாங்கதான் பார்த்துக்கணும்!" என்று புன்னகைத்தார்.
"நோயாளிகளுக்கு சொல்லுற ஆரோக்கிய அறிவுரைகள் எங்களுக்கும் பொருந்தும். சின்ன அறிகுறி வந்தாலும், மருந்து எடுத்து உடனே குணமாகுறேன்," என்று தோளை உயர்த்தினார்.
காலை நடைப்பயிற்சி, யோகா, நார்ச்சத்து நிறைந்த உணவு, வருடாந்திர உடல் பரிசோதனை—இவை அவரது வாழ்க்கை மந்திரம். "ஒரு நோயாளி, 'டாக்டர், உங்க சிரிப்பு என் பயத்தைப் போக்கிடுச்சு'னு சொன்னப்போ, மனசு நெறஞ்சு போகுதுன்னு !" நெகிழ்ந்தார் . "தன் கையே தனக்கு உதவி, இல்லையா?" என்று முகம் மலர்ந்தார்.
இந்த டாக்டர்ஸ் டேயில், டாக்டர் அழகுவேல் ராஜன் வாழ்க்கை, மருத்துவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கவனிக்க வேண்டியதன் அவசியத்தை உற்சாகமாக உணர்த்துகிறது.