

உலகிலேயே மிகப்பெரிய சாலை வசதிகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அந்த சாலை வசதிகள் மூலம் இந்தியா ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு மாநிலத்தையும், கிராமங்களையும் வலுவாக இணைத்து முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.
நாட்டின் உட் கட்டமைப்பு வசதிகளிலும் , பொருளாதாரத்திலும் சாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேவேளையில் மிகப்பெரிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு ஏராளமான நிதி ஆதாரம் செலவிடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் சாலை என்பதாலும் , லட்சக்கணக்கான கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக பயணம் செய்யும் நெடுஞ்சாலை என்பதாலும் , அடிக்கடி அதை பராமரிக்கவும் அவசியம் இருக்கிறது. அதற்காக நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரங்களில் டோல் கேட்டுகள் அமைக்கப்பட்டு வரி வசூலிக்கப்படுகின்றது.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக டோல் வரிகள் அனைத்தும் ஃபாஸ்டாக் மூலமாக வசூலிக்கப்படுகின்றன. பல நேரங்களில் டோல்கேட் வரிகள் அதிகம் என்று நம்மை என்ன வைத்தாலும் , ஒரு சிலருக்கு மட்டும் டோல் கேட்டுகளில் எந்த கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யும் அனுமதியை அரசாங்கம் வழங்கி உள்ளது.இதில் பாராபட்சம் என்பது இல்லை , அவர்களின் முக்கிய பணிகளில் இடையூறு வந்துவிடக் கூடாது என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வாகனங்களுக்கும், தனிநபர்களுக்கும் இந்த விதியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு பல வாகன ஓட்டிகளுக்கு இருப்பதில்லை. யாருக்கெல்லாம் டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
முதலில் அரசு சார்ந்த பலரது வாகனங்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. மிக முக்கியமாக ஜனாதிபதி , பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் , ஆளுநர் , மாநில முதல் அமைச்சர் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையான கட்டண விலக்கு உண்டு. இவர்களின் அதிகாரப் பூர்வ வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் காவல் துறை வாகனங்கள், தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவற்றுக்கு டோல் கட்டணத்தில் இருந்து முழுமையான விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மதிப்பு மிகுந்த இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான வாகனங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வாகனங்களுக்கும் கட்டணம் கிடையாது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கியத் துறைகளைச் சார்ந்த வாகனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.
மேலும் , ஒரு டோல் பிளாசாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த விலக்கின் படி செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவி(GNSS) பொருத்தப்பட்ட வாகனங்கள், ஒரு நாளில் 20 கிலோமீட்டர் வரை பயணிக்கும்போது, அவற்றுக்கு டோல் கட்டணமும் வசூலிக்கப்படாது.