

வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக சக்கர நாற்காலியுடன் ஒரு மாற்றுத்திறனாளி பொறியாளர் ஒருவர் விண்ணெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த போட்டியில் தனியார் விண்வெளி நிறுவனங்களும் இணைந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
அந்தவகையில் அமேசான் நிறுவனரும், உலக பணக்காரர்களுள் ஒருவருமான ஜெஃப் பெசோஸ்,2000ஆம் ஆண்டு ‘புளூ ஆரிஜின்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஜெஃப் பெசோஸ் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தனியார் விண்வெளிப் பந்தயத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்த நிறுவனமானது நாசா உடன் இணைந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் சமீப காலமாக மாற்றுத்திறனாளிகளையும் விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரமான ஈடுபட்டு வந்தது.
இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் 33 வயதான மைக்கேலா பெந்தாஸ் என்ற ஜெர்மனி பெண் தேர்வு செய்யப்பட்டார். விண்வெளி துறையில் என்ஜினீயரிங் முடித்த அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2018-ம் ஆண்டு மலையேற்றத்தின்போது விபத்து ஏற்பட்டது. இதில் முதுகுத்தண்டு உடைந்ததால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தியே அவர் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இந்தநிலையில் புளூ ஆரிஜின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விண்வெளி சுற்றுலாவுக்கு அவரது பெயர் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட் மூலம் மைக்கேலா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சென்றனர்.
இந்த ராக்கெட் சுமார் 100 கிலோமீட்டர் உயரம் வரை சென்று, விண்வெளியின் எல்லையாக கருதப்படும் கார்மான் கோட்டைத் தாண்டியது. சுமார் 10 நிமிடம் நீடித்த இந்த பயணத்தில் மைக்கேலா விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாமல் சக்கர நாற்காலி இன்றி மிதந்து தனது நீண்ட கால கனவை நிறைவேற்றினார். சில நிமிட விண்வெளிப்பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக பாராச்சூட் மூலம் அவர்கள் தரையிறங்கினர்.
விண்வெளி அனைவருக்கும் சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மைக்கேலாவின் பயணம் அமைந்தது. இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி ஒருவர் விண்வெளி சென்று சாதனை படைத்துள்ளார்.
தரையில் இறங்கிய பிறகு, இந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று மைகேலா கூறினார்.
அந்த பயணத்தின் மூலம் உடல் குறைபாடுகள் கனவுகளுக்குத் தடையாக இல்லை என்பதனை மைக்கேலா பெந்தாஸ் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இது மாற்றுத்திறனாளிகளையும் இனிமேல் விண்வெளிக்கும் அனுப்பும் நடவடிக்கையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என புளூ ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.