

எந்த ஒரு விஷயத்தையும் மனதிற்குள் பதிக்க வேண்டும் என்றால் அந்த இடத்திற்கு ஒருமுறை சென்று பார்த்து வருவது நல்ல பதிவை உண்டாக்கும். அப்படித்தான் விண்வெளி வீரராக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கும் இருக்கும். அதை நனவாக்க அவர்கள் செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன என்பதை இப்பதிவு உணர்த்தும்.
சாட்டிலைட் ஏவும் பொழுது அந்த இடம் எப்படி இருக்கும்? அதை ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை மிளிர்வது உண்டு. அது போல் ஒருமுறை அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பொழுது கென்னடி ஸ்பேஸ் சென்டரை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் அருகில் சென்று ஸ்பேஸ் கிராப்ட் எப்படி இருக்கிறது? அது எப்படி அனுப்பப்படுகிறது? அனுப்பும்பொழுதே ஏற்படும் அதிர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
விண்வெளி பற்றிய புத்தகத்தை படித்த உடன் அனைவருக்குமே விண்வெளி ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆசை ஏற்படுவது இயல்பு. அதிலும் விண்வெளிக்குப் போக வேண்டும் விண்வெளி வீரராக வேண்டும் என்ற ஆவல் உடையவர்களுக்கு கென்னடி விண்வெளி மையத்தை பார்த்து விட வேண்டும் என்றும் ஆவல் மேலிடுவது உறுதி.
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலத்தில் கென்னடி ஸ்பேஸ் சென்டர் இருக்கிறது. அங்குள்ள டிஸ்னி உலகத்தைப் பார்க்க செல்கின்றவர்கள் பெரும்பாலும் விண்வெளி மையத்தையும் பார்க்கத் தவறுவதில்லை.
அவர்கள் செல்லும் விண்வெளி ஓடம் எப்படி இருக்கிறது? அதில் எப்படி அமர்கிறார்கள் என்பதை எல்லாம் பக்கத்தில் நின்று பார்க்கலாம். மேலும் அவர்கள் விண்ணில் இருந்து எடுத்து வந்த கற்களை அங்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அதை காண முடியும். இதுபோன்ற பொருட்களை காணும் பொழுதே விண்வெளியில் வீரராகியே தீர்வது என்ற தீர்மானம் அதிகமாகும். மேலும் விண்வெளி வீரராக விருப்பம் கொள்ளும் மாணவர்கள், கென்னடி விண்வெளி மையத்தை பற்றிய சுவையான தகவல்களையும், விண்வெளி வீரர்களின் பயண முறைகளையும், வீரராக ஆவதற்கான தகுதிகளையும் அருகில் நின்று கவனித்து தெரிந்து கொள்வதால் பல்வேறு குழப்பங்கள் தீர்ந்து ஆராய்ச்சிக்கு மனம் உட்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக விண்வெளி மையத்தை ஒட்டிய கடல், அந்த கடலுக்கு அருகில் இருந்த மரங்கள், கடல் நீரின் சுத்தம், அமெரிக்காவின் இயற்கை அமைப்பு மற்றும் கென்னடி விண்வெளி மையம் அனைத்தையும் ஒரு சேர கண்டு களிக்க முடிவதில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் விண்வெளி படிப்பு படிப்பவர்களுக்கும் அது ஒரு சிறந்த இடம்.
கென்னடி விண்வெளி மையம் சரித்திர புகழ்பெற்றது. சந்திரனுக்கு மனிதனை ராக்கெட் மூலம் அனுப்பியது இங்கிருந்து தான். ராக்கெட் போல பறந்து சாட்டிலைட் மாதிரி பூமியைச் சுற்றி, விமானம் போல பூமிக்கு திரும்பி வரும் ஸ்பேஸ் ஷட்டில் ஏவப்படுவதும் இங்கிருந்து தான். அது திரும்பி வருவதும் இதே இந்த இடத்திற்குத் தான்.
அமெரிக்க நாட்டிற்கும் அமெரிக்க மக்களுக்கும் புகழைத் தேடித் தருகிறது இந்த விண்வெளி மையம். 'நாஸா' கடந்த காலத்தில் செய்த சாதனைகளையும், நிகழ்காலத்தில் செய்து வரும் சாதனைகளையும், எதிர்காலத்தில் செய்யப் போகும் சாதனைகளையும் தாங்கி நிற்கிறது இந்த கென்னடி ஸ்பேஸ் சென்டர்.
இப்பொழுது விண்வெளி வீரராகும் கனவும், அவற்றை சுற்றி பார்க்கும் மக்களின் கூட்டமும் பெருகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் படிக்கும் போதே கவனத்துடன் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். குறிப்பாக கணிதத்தையும் அறிவியலையும் நன்றாக படிக்க வேண்டும். மேலும் மேலும் அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்ட வேண்டும். முக்கியமானது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது.
திரு.அப்துல் கலாம் அவர்கள் சொல்வது போல கனவு காணுங்கள். ஆம், விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்று கனவு காணுங்கள். அந்தக் கனவு நினைவாக முயற்சி செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தைரியத்துடன் செயல்படுவது, விழிப்புடன் இருப்பது என்ற தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் பதட்டமில்லாமல் அமைதியாக முழுத்திறமையையும் பயன்படுத்தி காரியங்களை செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
இவற்றோடு அதிவேகமாக சரியாக சிந்தனை செய்யவும், எடுத்த தீர்மானத்தை நொடிக்கும் குறைவான நேரத்தில் செயல்படுத்தும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி விண்வெளி பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டு வளர வேண்டும். இப்படி முயற்சி செய்யும் பொழுது உங்கள் கனவு நனவாகும் என்பது உறுதி.