அனைத்துக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மக்களவையை வெல்லப்போவது யார்? புதிய கருத்துக் கணிப்பு!

Rahul and Modi
Rahul and Modihttps://www.onmanorama.com

ந்திய மக்களவைக்கான அனைத்துக்கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகளும் நேற்று மாலையோடு நிறைவடைந்துள்ள நிலையில், அதிக இடங்களை வென்று ஆட்சியமைக்கப்போவது யார் எனும் புதிய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், ஏறக்குறைய அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கின்றன. இந்த புதிய கருத்துக் கணிப்பின்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 350 இடங்களைக் கைப்பற்றும் என்றும், ‘இந்தியா’ கூட்டணி சுமார் 150 இடங்களையே வெல்லும் என்றும், இந்தியா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாத திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை சுமார் 40 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் புதிய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி, ‘சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர்’ என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி கூறியுள்ள ‘மக்கள் கருத்து’க்குப் பிறகு இந்தியக் கூட்டணி 295க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பை எட்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். அதேபோல், ‘‘இந்தக் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியால் ‘திட்டமிடப்பட்டவை.’ இவை அனைத்தும் அவர் செய்யும் உளவியல் விளையாட்டுக்கள். ஆனால், உண்மையான தேர்தல் முடிவுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்” என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்? ஜோ பைடன் கூறியது என்ன?
Rahul and Modi

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை (புதுச்சேரி உட்பட) அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணி 35 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் மீதமுள்ள தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றன.

மொத்தத்தில், ‘‘இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடல்கள் மற்றும் உளவியல் விளையாட்டுக்கள்” என்று இந்தியா கூட்டணியும், “ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் எல்லாவற்றையும் தாண்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தெரிவித்து இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com