திருச்செந்தூர் முருகன் கோவில் யானை நேற்று பாகன் உட்பட இரண்டு பேரை மிதித்து கொன்றது. இதனையடுத்து இன்று யானை காலை முழுவதும் அழுதக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நேற்று நடந்தது என்ன என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். வெளியூர் வாசிகளின் வருகையும் இங்கு அதிகம். குறிப்பாக கார்த்திகை மாத விரதம் தொடங்கியுள்ளதால், பலர் மாலை அணிவதற்காக வருவார்கள். மேலும் இந்தக் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இதற்கு வயது 25.
இது அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. பக்தர்களும் தெய்வானை யானைக்கு பழங்கள் மற்றும் காணிக்கையினை வழங்குவார்கள். இந்த யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வந்தார்.
இப்படியானநிலையில், பாகன் உதயகுமார் நேற்று யானைக்கு உணவளிக்க அதன் அருகே சென்றிருக்கிறார். அதேபோல் அவரின் உறவினரான சிசுபாலன் என்பவரும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது யானை தெய்வானை இருவரையும் பலமாக மிதித்திருக்கிறது. சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாகன் உதயகுமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இப்படியான நிலையில், இன்று காலை முதல் தெய்வானை கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டே இருக்கிறது. பாகன் இருந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்து அழும் காட்சிகள் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்துகிறது.
இதனையடுத்து நேற்று என்ன நடந்தது என்ற செய்திகளும் வெளியாகின.
அதாவது, பாகனின் உறவினரான சிசுபாலன் நேற்று வந்து தெய்வானையை தொட்டு தொட்டு செல்ஃபி எடுத்திருக்கிறார். அது யானைக்குப் பிடிக்கவில்லை பலமுறை அவரை பிடிக்காததுபோல் செய்கைமூலம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அப்போதும் அவர் தொந்தரவு செய்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஓரளவு பொருமைக் காத்த தெய்வானை தாங்கமுடியாமல் அவரைத் தள்ளிவிட்டு மிதித்திருக்கிறது. அதைத் தடுக்க வந்த பாகனையும் தாக்கியிருக்கிறது. பின் தான் தாக்கியது தன்னுடைய பாகனை என்று அறிந்த தெய்வானை அவரை எழுப்ப முயன்றிருக்கிறது.
ஆனால், அவர் எழவில்லை. இதனால் மேலும் கோபம் அடைந்த தெய்வானை மேலும் சிசுபாலனை தாக்கியிருக்கிறது. இதனால்தான் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். மேலும் பாகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று அவர் வராததாலும், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தும் தெய்வானை காலை முதல் அழுதுக்கொண்டே இருக்கிறது.
இது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.