உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களான இந்த மூன்றும் எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கின்றன தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மற்ற வரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத்தானே காப்பாற்றிகொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்டநிலையில் இருக்கும் ஒரு இந்தியக்குடிமகனுக்கு நம் நாட்டுச்சட்டம் வழி சொல்கிறது.
திருமண உறவுகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரியும்போது, மனைவிக்கு ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால், ஒரு சிலர் தங்களுக்கு அப்படியான எந்த செட்டில்மென்டும் வேண்டாம் என்று சொல்வதுண்டு. இதுகுறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்று ஹோஷியார்பூர் குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதில் மனைவிக்கு மாதம் ரூ.6000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
கணவர் தனது மனுவில், மனைவியின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஜீவனாம்சச் செலவுகளை ஈடுகட்டும் வகையில், ஒருமுறைத் தீர்வாக மனைவிக்கு 60,000 ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. கணவரின் கூற்றுப்படி, மேற்கொண்டு எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காமல் இருப்பதற்கு இந்தத் தொகை போதுமானது. எனவே ஜீவனாம்சம் வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்து, பணத்திற்காக ஒரு மனைவி தனது எதிர்கால ஜீவனாம்ச உரிமையைக் கைவிடுவதை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், தேசியக் கொள்கைக்கு எதிரானது என்று நீதிபதி அமர்வு குறிப்பிட்டது. அதாவது எதிர்கால ஜீவனாம்சத்திற்கான தனது உரிமையை, ஒரு மொத்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுக்க மனைவி அளிக்கும் ஒப்புதலானது, பொதுக் கொள்கைக்கு முரணானது; மேலும், ஜீவனாம்சத்திற்கான உரிமை என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-இன் கீழ் ஒரு சட்டப் பாதுகாப்பு என்றும், அதை எந்தவொரு தனிப்பட்ட சமரசத்தின் மூலமும் கைவிட முடியாது என்றும் பிற்காலத்தில் ஜீவனாம்சம் கோருவதிலிருந்து அவரை அது தடுக்காது என்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ஒரு பெண் உடல் உழைப்பின் மூலம் பிழைக்க முயற்சிக்கிறார் என்பதற்காக அவர் சுதந்திரமானவர் என்று அர்த்தமாகாது என நீதிமன்றம் குறிப்பிட்டது. குறைந்த அளவு சம்பாதிப்பது மட்டுமே ஒருவரை ஜீவனாம்சம் கோருவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யாது என்றும் அது தெளிவுபடுத்தியது.
கணவனின் நிதி நிலையை ஆராய்ந்தபோது, அவர் 10+2 (மேல்நிலைப்பள்ளி) வரை கல்வி பயின்றுள்ளதாகவும், மின் பொறியியலில் (Electrical Engineering) பட்டயம் (Diploma) பெற்றுள்ளதாகவும், அவர் ஒரு திறமையான கொத்தனார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் கணவன் வாதிட்டது போல ரூ.10,000 அல்லாமல், அவரது மாத வருமானம் ரூ.20,000 ஆக இருக்கும் என்று நீதிமன்றம் மதிப்பிட்டது.
மனைவிக்கு மாதந்தோறும் 6,000 ரூபாய் பராமரிப்புத் தொகையை வழங்கியதில் குடும்ப நீதிமன்றம் சரியாகவே செயல்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இத்தொகை போதுமானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், முன்னதாக வழங்கப்பட்ட 60,000 ரூபாய் தொகையை, வாழ்நாள் முழுவதற்குமான பராமரிப்புத் தொகையாகக் கருத இயலாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தொகையாக இருப்பதால், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீண்ட காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை இத்தொகையால் உறுதி செய்ய இயலாது என்றும் நீதிமன்றம் கூறியது.
முன்னதாக மனைவி ஒரு மொத்தத் தொகையை (lump sum) ஏற்றுக்கொண்டு சமரசம் செய்துகொண்டிருந்தாலும், ஜீவனாம்சம் கோருவதற்கான அவரது சட்டப்பூர்வ உரிமையை அது தடுத்துவிடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் புறக்கணிக்கவோ அல்லது சமரசம் செய்துகொள்ளவோ இயலாது என்றும்; குறிப்பாக, நிதிப் பாதுகாப்பின் அடிப்படை அம்சங்களைப் பாதிக்கும் வகையிலான சூழல்களில் இது கண்டிப்பாகச் செல்லாது என்றும் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.