கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு திரும்ப வருமா?

கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு திரும்ப வருமா?
Published on

பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாக கருதப்படும் 105 கேரட் மதிப்புள்ள கோஹினூர் வைரம், இந்தியாவின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்து பிரிட்டன் மகாராணியாக இருந்த எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்த கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர நீண்ட காலமாக முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ராணி அணிந்து வந்த கிரீடத்தில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான கோஹினோர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர கோரிக்கை வலுத்து வருகிறது. இன்று இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் யூரோ என கணக்கிடப்படுகிறது. . இந்திய மதிப்பில் 3189 கோடியே 83 லட்சம் ரூபாய்..!

குறிப்பிட்ட இந்த கோஹினூர் வைரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள கொல்லூர் வைர சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. 793 கேரட் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வைரக் கல்லாக அப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாக பல இஸ்லாமிய, சீக்கிய, பிரிட்டன் மன்னர்களிடையே கைமாறியுள்ளது. லண்டன் டவரில் இந்த வைரக்கல் பாதுகாக்கப்படுகிறது.

ஆங்கில நாளிதழான டெய்லி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கடத்திச் செல்லப்பட்ட தொல்பொருள் சிற்பங்கள், மதிப்புமிக்க பொருட்களையும், பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட கோஹினூர் வைரத்தையும் மீட்டுக் கொண்டுவர இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்தியில் கூறி வருகிறது.

இது பிரதமர் மோடி மேற்கொள்ளும் முக்கியமான திட்டமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள டெய்லி டெலிகிராஃப், இந்த திட்டம் குறித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையின்போது பேசப்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் கலை பொருட்கள் சேமிப்பவர்கள் தாமாக முன்வந்து கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com