

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும், இன்றும் பலர் ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே அதிகளவு விரும்புகின்றனர். அதே சமயம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மட்டும் நம்பி இருக்காமல் பலரும் வீடுகளில் குறிப்பிட்ட அளவு பணத்தை ரொக்கமாக வைத்திருக்கவும் விரும்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வீட்டில் பணம் வைப்பதற்கே உச்ச வரம்பு விதிக்கப்படும் என்றும் அதற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் வீடுகளில் பணத்தை ரொக்கமாக வைத்திருக்க விரும்புவோருக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த தகவல் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (PIB) விளக்கம் அளித்துள்ளது. அதாவது, 1961ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
அதாவது, சட்டத்தில் உள்ள வழிகள், கட்டுப்பாடுகளை, விதிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றி அமைப்பது மட்டுமே புதிய வருமான வரிச் சட்டத்தின் குறிக்கோள் எனவும், ரொக்கப் பணம் வைத்திருப்பதற்கு உச்ச வரம்பு அல்லது பரிவர்த்தனை செய்வது தொடர்பாக புதிய வரம்போ, அபராதமோ விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் PIB தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொருவரும் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ரொக்கமாக வைத்திருக்கலாம் என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம் வீட்டில் ஒருகுறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்கள், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களும், வருமான வரி கணக்கில் (ITR) அந்தத் தொகை பற்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதனால், ‘வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை ரொக்கமாக வைத்திருந்தால் அபராதம்’ என்று பரவும் தகவல் வெறும் வதந்தி என்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம் என்றும், உண்மையான தகவல்களை அறிய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால், சட்டப்படி வருமான வரி செலுத்தி வரும் மக்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் ரொக்கமாக வைத்திருக்க தடை இல்லை என்ற போதும் அந்தப் பணத்திற்கான ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் பிஐபி விளக்கமளித்துள்ளது.