மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த வரி குறைப்பால் மாநிலத்திற்கு சுமார் ரூ.9,750 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நான்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5% மற்றும் 18% என இரண்டு விகிதங்களாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மாற்றம் மாநிலங்களின் வருவாயில் 15% முதல் 20% வரை இழப்பை ஏற்படுத்தும் என நிதித்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,30,000 கோடியாக இருந்தது. இதில் மாநிலத்தின் பங்கு ரூ.65,000 கோடி. இந்த வருவாயில் 15% இழப்பு ஏற்பட்டால், அது ரூ.9,750 கோடிக்கு நிகராகும். இந்த பெரிய இழப்பு மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில், இந்த வரி குறைப்பு தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை விட அதிகமாகப் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், கடன் ஆதரவு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, 2021-க்கு முன்பு ஜி.எஸ்.டி.-யை கடுமையாக எதிர்த்த ஸ்டாலின், இப்போது ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்படும் வருவாய் இழப்பு பற்றி கவலைப்படுகிறார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் வரி வருவாய் வளர்ச்சி விகிதம் 5.7%-ல் இருந்து 11% முதல் 16% வரை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த வருவாய் அதிகரித்த பின்னரும், தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது, தி.மு.க. அரசின் ஊழல்தான் உண்மையான தடையாக உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.