
பொதுவாக ஆறுவிதமான சுவைகளில் கசப்புச் சுவை விரும்பி சாப்பிட முடியாததுதான். ஆனால் அந்த சுவைதான் பல உடல் நலக் கோளாறுகளை நீக்கும் ஆற்றல் பெற்றது. அஜீரணத்தால் ஏற்படும் குமட்டல், நாக்கில் ஏற்படும் சுவையின்மை ஆகிய வற்றை கசப்புச் சுவை போக்கிவிடும். மேலும் நாக்கு வறண்டு ஏற்படும் தண்ணீர் தாகம், குடலில் ஏற்படும் கிருமிகள் விஷம், தோல் நோய்கள், மயக்கம், கிறுகிறுப்பு, பித்த எரிச்சல், கபம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் தாதுக்களால் ஏற்படும் கோளாறுகள், அழற்சி போன்றவற்றை சரிசெய்யும். இதோடு மலம் மற்றும் சிறுநீரின் அளவைச் சுருங்கக் செய்யும். கசப்பு சுவை கொண்ட உணவுகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். எளிதில் ஜீரணமாகும்.
இந்தியாவில் ஆயுர்வேதத்தில் பல பிணிகளை விரட்ட கசப்பான மூலிகைகளே பயன்படுத்தப்படுகிறது. இது பித்தம், கபம் மற்றும் தோஷங்களை நிர்வகிக்கிறது. சர்க்கரை நோய் தாக்கத்தால் ஏற்படும் நாவறட்சி, தண்ணீர் தாகம், கைகால் எரிச்சல், தாதுக்களின் அழற்சி மற்றும் அழுகல், மாமிசக் கொழுப்பால் ஏற்படும் கட்டிகள், சொறி சிரங்கு, மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இவற்றை தடுப்பதில் கசப்பான உணவுகளே உதவுகிறது.
கசப்பான உணவை, கசப்பான சுவை கொண்ட காய்கறிகளை தவிர்ப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது பாகற்காய் போன்ற கசப்பு சுவை கொண்ட உணவுகளில் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகள் பெருமளவில் உள்ளன. இந்த கசப்பான உணவை சாப்பிடாமல் இருப்போர் தங்கள் உடலில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு காரணிகளை இழந்துவிடுகின்றனர் என்கிறார்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்.
பாகற்காய், சுண்டைக்காய், அதலைக்காய், அகத்திக்கீரை, வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக்கீரை வகைகள் கசப்புச் சுவை கொண்ட உணவுகள். கொத்த மல்லி, தூதுவளை, முளைக் கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை சற்றே கசப்புச் சுவை குறைந்தது. இருப்பினும் சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கோரியோப்சிஸ் குடும்பத்தில் உள்ள ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரவுட், முட்டைக்கோஸ், காலே, முள்ளங்கி மற்றும் அருகுலா போன்ற காய்களில் கசப்பு ருசியே உள்ளது. இந்த காய்களில் குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை தான் இந்தக் காய்களுக்கு கசப்பு சுவையையும், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. இதுகுறித்த ஆய்வில், குளுக்கோசினோலேட்டுகள் புற்றுநோயை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் மெதுவாக்கும் என்கிறார்கள்.
கசப்பு நார்த்தங்காய், கடாரம் நார்த்தங்காய் சாறு புளிப்பு சுவை உள்ளது என்றாலும் அவையும் கசப்பான சுவை உடையது தான். கரிசலங்கண்ணிக் கீரை, பொண்ணாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, மிளகாய், கடுகு போன்றவைகளும் சிறிது கசப்பு சுவையை கொண்ட உடலுக்கு நல்லது செய்யும் கற்பகதரு மூலிகைகள்தான்.
தானியங்களில் கசப்பான சுவை உள்ளது வெந்தயம் இதை இட்லி தோசைமாவுடன் சிறிதளவு கலந்து சமைக்கலாம். அதேபோல் சப்பாத்தி மாவுடன் கலந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
கிரீன் டீயும் உலகின் பல பகுதி மக்களால் அருந்தப்படும் பானமாகும். இதில் உள்ள கேடசின் மற்றும் பாலிபினால் இதற்கு இயற்கையாகவே கசப்பான சுவைக் கொடுக்கும். கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக செயல்படுகின்றன. அதேபோல் ப்ரீ ரேடிக்கல்கள்களால் ஏற்படும் சேதத்தையும், இதய நோய்க்கான ஆபத்தையும் கிரீன் டீ குறைக்கின்றன. தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது 20 சதவீத மாரடைப்பு அபாயத்தை நீக்கும்.