2006ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2006ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்புகளில் மொத்தம் 189 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 820 அப்பாவிகள் படுகாயம் அடைந்தனர். இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஜூலை 21 அன்று, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2006 ஜூலை 11 அன்று மும்பையின் மேற்கு ரயில்வே உள்ளூர் வழித்தடத்தில் குண்டுகளை சதி செய்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சிறப்பு MCOCA நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்தது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்த ATS அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்திரவதை செய்ததாகவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கமல் அன்சாரி, முகமது ஃபைசல் அத்தவுர் ரஹ்மான் ஷேக், எஹ்தேஷாம் குத்புதீன் சித்திக், நவீத் ஹுசைன் கான் மற்றும் ஆசிப் கான் ஆகியோர் அடங்குவர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் தன்வீர் அகமது முகமது இப்ராஹிம் அன்சாரி, முகமது மஜித் முகமது ஷஃபி, ஷேக் முகமது அலி ஆலம் ஷேக், முகமது சாஜித் மார்குப் அன்சாரி, முஸம்மில் அத்தவுர் ரஹ்மான் ஷேக், சுஹைல் மெஹ்மூத் ஷேக் மற்றும் ஜமீர் அகமது லத்தீஉர் ரஹ்மான் ஷேக் ஆகியோர் அடங்குவர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசின் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு கோரவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் சில கருத்துகள் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) கீழ் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளைப் பாதிக்கலாம் என்பதால், அந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்க அவர் கோரினார்.
“நீதிமன்றம் இந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்குமாறு பரிசீலிக்கலாம், இருப்பினும், அவர்கள் மீண்டும் சிறைக்கு வர வேண்டியதில்லை.” என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட அமர்வு, "அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அவர்களை மீண்டும் சிறைக்கு கொண்டு வரும் கேள்வி இல்லை என்பதும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த வாதத்தை கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். சர்ச்சைக்குரிய தீர்ப்புக்குத் தடை விதிக்கப்படுகிறது." என்று உத்தரவில் குறிப்பிட்டது.