

தமிழக அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள், கடந்த மே 4ம்தேதி எண்ணப்பட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்துக்கொண்டு இருக்கிறது.
* தவெகவிற்கு காங்கிரஸ் நிபந்தமையற்ற ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்சியில் பங்கு என்பதோடு மட்டுமல்லாமல் இனி நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் காங்சிரசுடன் தவெக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு காங்கிரஸ் ஆதரவு தந்தது.
* பாமக, தவெகவோடு சேர்ந்துவிடும். அந்த அமைச்சரவையில் சவுமியா அன்புமணி சேர்ந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் திடீரென்று அன்புமணி ராமதாஸ் எந்த கருத்தையும் இது தொடர்பாக சொல்ல மறுத்துவிட்டார்.
அதாவது பாமக, தவெகவுடன் சேர கூடாது. அதற்கு ஈடாக அன்புமணி ராமதாசுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று அதிமுக தரப்பில் பேரம் பேசப்பட்டதால் பாமக இப்போது தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் கிளம்பி உள்ளது.
* தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டு இதில் முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில் திடீரென அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தவெகவிற்கு விசிக ஆதரவு தராது என்றே சொல்லப்படுகிறது.
* ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தவெக பக்கம் செல்வதாக கூறப்பட்ட நிலையில் அவர்களும் திமுகவை விட்டு செல்ல வேண்டாம். திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
* விஜய் நேற்று (7-ம்தேதி) முதல் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அதற்காக ஏற்பாடுகளை தவெகவினர் செய்ய தொடங்கினர்.
ஆனால் அதற்கு முன்பு எப்போதும் வழக்கத்தில் இல்லாத ஒன்றாக ஆளுநர், தவெகவிற்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற தகவல் இன்னும் வரவில்லை என்றும் அது வந்த பின்னர் தான் முடிவெடுப்பேன் என்றும் ஒரு செய்தியை பேட்டி ஒன்றில் அழுத்தமாக சொன்னார்.
அதாவது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்க வேண்டுமென்றால், ஆளுநர் (நான்) முடிவு செய்ய வேண்டும். தவெகவினர் அல்ல. என்பதனை தெளிவுபடுத்தவே அந்த பேட்டியை அளித்து இருந்தார். அதன் வெளிப்பாடாக தான் அவர், விஜய்யை ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
* தவெகவிற்கு ஆதரவு தரும் என்று நம்பப்பட்ட விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், பாமக ஆகிய பின் வாங்கி இருக்கின்றன. அதிமுக ஆதரவு தரமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. எனவே விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. எனவே கவர்னரும் அவரை ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
அதே சமயம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும், சட்டசபையில் முதல்வர் வேட்பாளர் விஜய், தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா முடியாதா என்பதை ஆளுநரால் எப்படி தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பே உதாரணமாக காட்டப்படுகிறது. 1994-ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு வழக்கான எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இன்றுவரை இத்தகைய சூழல்களில் ஒரு "பைபிள்" போலப் பின்பற்றப்படுகிறது.
ஒரு முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது; அது சட்டமன்றத்தின் தளத்தில் (Floor of the House) தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. யாருக்குமே தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது, தனது தனிப்பட்ட விருப்புரிமையைப் பயன்படுத்தி (Discretionary Power), நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று கருதும் ஒருவரை ஆளுநர் அழைக்கலாம் என கூறுகிறது. எனவே ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க உரிமை தந்து பதவி பிரமாணம் செய்து வைப்பதே நியாயம் என்கின்றனர் நிபுணர்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போகும் போது அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என்கின்றனர்.
இதனிடையே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர தவெக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கர்நாடகாவில் எஸ.ஆர்,பொம்மை வழக்கில் வந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி இந்த வழக்கை முன்னெடுத்து செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் இனி அடுத்து என்ன நடக்கப்போகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.