ரூ.500 ஓய்வூதியத்திற்காக 90 வயது மாமியாரை 9 கி.மீ முதுகில் சுமந்து சென்ற பெண்..!

Woman Carries Mother-In-Law
Woman Carries Mother-In-LawAI Image
Updated on

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்திலிருந்து வரும் இந்த நெஞ்சை உருக்கும் கதை, சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினர் தங்களுக்குச் சேர வேண்டியதைப் பெறுவதற்காக அன்றாடம் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தோலுரித்துக் காட்டுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் குனியா பகுதி ஜங்கல்பாடா கிராமத்தில் உள்ள மைன்பாட் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண் சுக்மானியா பாய். இவருக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கும்.

இவரின் 90 வயது மாமியாருக்கு ரூ.500 முதியோர் பென்ஷன் வருகிறது. நேரில் வந்து பயிமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பென்ஷன் பணம் வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால் நடக்க முடியாத தன்னுடைய 90 வயது மாமியாரை சுக்மானியா பாய் மாதமொரு முறை வங்கிக்கு முதுகில் சுமந்து செல்கிறார்.

முறையான சாலை வசதிகள் இல்லாத அந்த குக்கிராமத்தில் இருந்து கொளுத்தும் வெயிலில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் ஓடைகளைக் கடந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் மாமியாரை தனது முதுகில் சுமந்து செல்கிறார் சுக்மானியா பாய். அதாவது சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் கான்கிரீட் தளம் மற்றும் வெப்பத்தாக்கம் ஏற்படும் அபாயம் என அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தனது மாமியாரை சுக்மானியா பாய் சுமந்து செல்கிறார்.

இதையும் படியுங்கள்:
குரங்குகளை விரட்ட கரடி வேஷம் போடும் விவசாயிகளின் வீடியோ வைரல்!
Woman Carries Mother-In-Law

இதற்கு முன்பு முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகை அந்தந்த கிராமங்களிலேயே உள்ளூர் அதிகாரிகள் மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், முறைகேடுகளை தடுப்பதாக கூறி அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வங்கி கணக்கு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையினால்தான் இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் அந்த மூதாட்டியின் 'KYC' நடைமுறைகள் முழுமையடையாத காரணத்தினால், கடந்த நான்கு மாதங்களாக அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை; இதனாலேயே அந்த இரு பெண்மணிகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மெயின்பாட் நகரத்தில் அமைந்துள்ள 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' கிளையை அடைவதற்காக, சுக்மானியா பாய் தனது மாமியாரை முதுகில் சுமந்து செல்வதை அவ்வழியே சென்ற ஒருவர் கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மக்களின் இன்னல்களை புரிந்துகொள்ள முடியாத வறட்டு அதிகாரிகளுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதற்கிடையே, ஆவணங்கள் முழுமையாக இல்லாததே ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்று, மெயின்பாட் ஜன்பத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குஷ்பூ சாஸ்திரி ஒப்புக்கொண்டுள்ளார்.

கடைசியாக கடந்த ஜனவரி மாதத்தில்தான் ஓய்வூதியம் அவரது வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டதாகவும், KYC நடைமுறைகள் நிலுவையில் இருந்த காரணத்தினால், கடந்த நான்கு மாதங்களாக அந்தச் சேவை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

வங்கிக் கிளையில் KYC நடைமுறைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட உடனேயே, நிலுவையில் இருந்த 2,000 ரூபாய் ஓய்வூதியத் தொகையை வங்கி நிர்வாகம் உடனடியாக விடுவித்தது.

அடுத்த மாதம் முதல் சுக்மனியாவின் மாமியாருக்கு ஓய்வூதியத் தொகை மீண்டும் அவரது வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று அந்த அதிகாரி அப்பெண்களிடம் உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்:
உடைந்த ஐபோனை மினி கம்ப்யூட்டராக மாற்றிய நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ..!
Woman Carries Mother-In-Law

இந்த நிர்வாகக் குறைபாட்டிற்காக, மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் டி.எஸ். சிங் தியோ அரசை விமர்சித்தார். மக்களிடம் வாக்குக் கேட்டு அவர்களின் வீடுகளுக்கே செல்லும் அரசியல்வாதிகள், மாநிலத்திலுள்ள முதியோர்களுக்கான ஓய்வூதியம் அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

logo
Kalki Online
kalkionline.com