பிஞ்சு குழந்தைகள் உயிர் தான் முக்கியம்..! 25 குழந்தைகளை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த வீரத்தாய்!

honey bee
honey bee
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரன்பூர் அங்கன்வாடி வளாகம். இங்கு அங்கன்வாடி ஊழியராக காஞ்சன் பாய் மேக்வால் (40) என்ற பெண்மணி பணியாற்றி வந்தார்.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல், இந்த வளாகத்தில் தேனீக்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தின. குழந்தைகள் மதிய நேரத்தில் வழக்கம்போல விளையாடிக்கொண்டிருந்த சிரிப்புச் சத்தம், திடீரென அலறலாகவும் கூச்சலாகவும் மாறியது. அதே வளாகத்தில் மதியம் 2 மணி முதல் ஆரம்பப் பள்ளியும் இயங்கி வருகிறது. அங்கன்வாடியைச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தேனீக்கள் கூட்டம் தாக்கியபோது, அங்கு சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்ததாகக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தேனீக்கள் குழந்தைகளை நோக்கி வேகமாக நகர்ந்ததால் அந்த இடமே பரபரப்பானது. அப்போது குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த காஞ்சன் பாய் மேக்வால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளைத் தேனீக்களிடமிருந்து பாதுகாக்க, அங்கிருந்த தார்ப்பாய்கள் மற்றும் பாய்களைக் கொண்டு அவர்கள் மீது போர்த்தினார். மேலும், தன் உடலால் குழந்தைகளை அணைத்தபடி அவர்களைப் பத்திரமாக அங்கன்வாடி அறைக்குள் அழைத்துச் சென்றார்.

குழந்தைகளைப் பாதுகாப்பாக உள்ளே விட்ட காஞ்சன் பாயை, தேனீக்கள் கூட்டம் மொத்தமாகச் சூழ்ந்து கொட்டின. இதில் நிலைதடுமாறிய அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது இந்தத் துணிச்சலான செயல், அவரது சொந்தப் பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. காஞ்சன் பாய், தனது மகன் ரவி மேக்வால் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்கும் கணவர் ஷிவ்லால் ஆகியோருடன் வசித்து வந்தார். தனது தாயின் இறப்பால் குடும்பமே துயரத்தில் வாடினாலும், "என் அம்மா அங்கிருந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர் குழந்தைகளைக் கடவுளாக நேசித்தார்" என அவரது மகன் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

காஞ்சன் பாய், கிராமத்தின் 'ஜெய் மாதா தி' சுயஉதவிக் குழுவின் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். ஒரு தாயாகத் தனது உயிரைப் பணயம் வைத்து 25 பிஞ்சுகளைக் காத்த காஞ்சன் பாயின் மறைவு, ரன்பூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com