இயற்கை அதிர்ச்சி - பூமியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான நாள்!

இயற்கை அதிர்ச்சி - பூமியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான நாள்!

இயற்கை அதிர்ச்சி - பூமியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான நாள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

ருவநிலை தப்புதலால் வரும் பிரச்னைகளில் ஒன்றாக வெப்பநிலைப் பெருக்கமும் சேர்ந்துள்ளது. இந்த பூமியில் இதுவரை இல்லாதபடியாக, கடந்த மூன்றாம் தேதியன்று அதிகபட்சமான சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதிவுசெய்யப்பட்டுள்ள வெப்பநிலை அளவுகளில், இதுவே மிக அதிகமான வெப்பநிலை என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு மையத்தின் கணக்குப்படி, ஜூலை 3ஆம் தேதியன்று பூமியின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் ஆகும். முன்னதாக, 2016 ஆகஸ்ட்டில் பூமியின் அதிகபட்சமான வெப்பநிலையாக 16.92 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. அதை இப்போதைய நிலவரம் முறியடித்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள், சர்வதேச சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

இந்த அளவுக்கு பூமிப் பந்தையே சூடாக்கிக்கொண்டு இருப்பதன் காரணம், இயற்கையாகவே ஏற்படும் எல்நினோ விளைவும், அதிகரித்துவிட்ட கார்பன் உமிழ்வும் சேர்ந்துகொண்டதுதான் என்று கூறப்படுகிறது.

எல்நினோ என்பது பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் நிகழ்வுகள் என்பது தெரிந்ததே. இதன் விளைவாக வெப்பமும் குளிரும் இடைப்பட்ட நிலையும் மாற்றம் அடையும்.

கடந்த மாதத்திலேயே இந்த எல்நினோ சூழல் வரத் தொடங்கிவிட்டது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து பன்னாட்டு அளவில் செயல்பட்டு வரும் சூழலியல் அமைப்புகளும் இதுகுறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

உலக வானிலையியல் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரியனின் வெப்பம் தொடர்ந்து பூமியிலேயே தங்கிவிட்டதைப் பற்றியும் இதற்குக் காரணமான கார்பன் உமிழ்வு பற்றியும் பெரும் கவலையும் அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில், எல்நினோவின் வெப்பமான பகுதி தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக சூழல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இப்படியான இதுவரை கண்டிராத பாதிப்புகள் புதிதுபுதிதாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.

ஜூலை 3 மிக அதிக வெப்பமான நாள் என்றால், கடந்த மாதம்தான் இதுவரை இந்த பூமியின் மிக அதிகமான வெப்பமான மாதமாகவும் பதிவாகியுள்ளது.

கண்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக இருக்கும் அண்டார்ட்டிக்காவில், ஜூலை மாத வெப்பநிலை இதுவரை இல்லாதபடி பதிவாகியுள்ளது. உக்ரைனின் வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சித் தளத்தில் வெப்பநிலை 8.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றால் வரக்கூடிய ஆபத்தை நினைத்துப்பார்க்க முடியும்.

மைனஸ் வெப்பநிலை இருக்கவேண்டிய இடத்தில் இந்த அளவுக்கு வெப்பநிலை வந்துள்ள நிலையில், முன்னைவிட அதிகமாக பனிக்கட்டிகள் உருகிவருகின்றன.

சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை பனிக்கட்டியின் வெண்மையால் எதிரொலித்து, அதன் தாக்கத்தைக் குறைத்துவந்த நிலை இனி அங்கு தொடருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com