நோய் பரப்பும் சாக்லேட்டுகளை திரும்பப் பெற்ற காட்பரீஸ் நிறுவனம்!

நோய் பரப்பும் சாக்லேட்டுகளை திரும்பப் பெற்ற காட்பரீஸ் நிறுவனம்!

‘இனிப்பை எடு; கொண்டாடு’ என்று கூறிக்கொண்டு இனிப்புப் பொருளான சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடாதவர்களே இன்றைக்கு இருக்க முடியாது. பல் பிரச்னைகள் மற்றும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருளாக சாக்லேட் இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அதிலும் காட்பரீஸ் சாக்லேட்டுகளுக்கு தனி மவுசுதான். ருசியான பொருட்களில்தான் உடல் நலக்கேடும் அடங்கி இருக்கிறது என்பதற்கேற்ப, சமீப காலமாக காட்பரீஸ் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி விட்டது. காலாவதி தேதிக்கு முன்பே சாக்லேட்டுகளில் புழு இருப்பது, கெட்டுப்போய் விடுவது போன்ற வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காணலாம்.

சமீபத்தில், இங்கிலாந்தில் காட்பரீ நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆறு வகை சாக்லேட்டுகளில், ‘லிஸ்டரியோ‘ எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டெய்ம், கிரன்ச்சி, ஃப்ளேக், பட்டன்ஸ், டெய்ரி மில்க் சங்க்ஸ் மற்றும் ஹீரோஸ் ஆகிய சாக்லேட் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அந்த சாக்லேட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த சாக்லேட்டுகளில் உள்ள லிஸ்டரியோ என்ற பாக்டீரியாவால் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, உடல் வலி, உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு போன்ற உபாதைகளையும் அது ஏற்படுத்தியதாக, அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணிகள், முதியவர்கள், இளம் குழந்தைகள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த பாக்டீரியா அதிகளவில் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக காட்பரீ தயாரிப்பாளர் முல்லர் கூறுகையில், ``முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் இந்த ஆறு வகை சாக்லேட்டுகளையும் இங்கிலாந்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். கைவசம் இந்த சாக்லேட்டுகளை வைத்திருக்கும் மக்கள் அவற்றை அந்தந்தக் கடைகளில் கொடுத்து, அவற்றுக்கான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தயாரிப்புகள் மாண்டல்ஸ் என்னும் நிறுவனத்தின் அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டவை. இந்தச் சம்பவம் உலகின் வேறு எந்த நாடுகளிலும் இருக்கும் பிற தயாரிப்புகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com