இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் - பாதிப்பு இல்லை, ஆனால் பீதி தொடர்கிறது!

இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் - பாதிப்பு இல்லை, ஆனால் பீதி தொடர்கிறது!

இன்று காலை ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே 100 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இதுவரை பாதிப்பு எதுவுமில்லை.

நேற்று மாலை 4.20 மணிக்கு இந்தியாவின் அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகியிருப்பதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பபட்டதாகவும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பலியாகின. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. நிலநடுக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலநடுக்கத்திற்கு முதல் நாள் பறவைகளின் நடமாட்டம் தடை பட்டிருந்ததாகவும், நாய், மாடு உள்ளிட்ட விலங்குகளின் ஓலம் அதிகமாக இருந்ததாகவும் அதே போன்று நேற்றும் உணர்ந்ததாக அஸ்ஸாம் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்னரே துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுமென்று நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார். துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வர வாய்ப்பிருப்பதாக டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆசிய நாடுகளில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடங்கி இந்தியா வரையிலான பகுதிகளில் அடுத்த கட்ட நிலநடுக்கம் இருக்குமென்று கணித்திருந்தார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவை கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என டிவிட்டரில் கூறியிருந்தால். இது தொடர்பான அவரது வீடியோவும் இணையத்தில் வைரலானது.

அது குறித்து வட இந்திய ஊடகங்களில் விரிவான விவாதங்கள் நடந்தன. ஒருவேளை இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் இடத்தில் இந்தியா தயாராக இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே கணித்தபடியே ஆப்கானிஸ்தானிலும் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியப் பகுதிகளில் தொடருமா என்றும் மக்கள் மத்தியில் பீதி எழுந்திருக்கிறது. துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவில் இதுவரை 33 ஆயிரம் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உயிர் பலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com