கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு: சிங்கப்பூர் தமிழருக்கு நாளை தூக்கு!

கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு: சிங்கப்பூர் தமிழருக்கு நாளை தூக்கு!

ர்ச்சைக்குரிய மரண தண்டனை விவகாரத்தில் சிங்கப்பூர் தமிழர் ஒருவருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படுகின்றன. அவை சமூகத்தைப் பாதுகாக்க மிகவும் அவசியம் என்று அந்நாடு தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர் தங்கராசு சுப்பையா என்பவர் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு நாளை தூக்கிலிடப்பட இருக்கிறார். 46 வயதான தங்கராசு, 2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை விநியோகம் செய்ததில், ’போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டார். விநியோகத்தின்போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அதை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவருக்கு இருந்ததாக வழக்கறிஞர்கள் கூறினர், மேலும், தங்கராசுவுக்கு விநியோகம் செய்பவர் பயன்படுத்திய இரண்டு தொலைபேசி எண்களைக் கண்டறிந்து உள்ளனர். ’இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுடன் தொடர்பு கொண்ட நபர் தாம் இல்லை’ என்று தங்கராசு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. தங்கராசுவின் கடைசி மேல்முறையீட்டில், விநியோகத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவருக்கு இருப்பதாக நீதிபதி ஒப்புக்கொண்டார். இதனால் அவர் மிகவும் மென்மையான தண்டனைக்கு தகுதியற்றவர் ஆகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். அதேபோல், ’தங்கராசு சுப்பையா பலவீனமான சாட்சியங்களின் பேரில் குற்றவாளி ஆக்கப்பட்டு இருக்கிறார்’ என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், ’தங்கராசுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் அவரது கடைசி மேல்முறையீட்டை அவரே வாதிட வேண்டியிருந்தது’ என்றும் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் கூறும்போது, ’தங்கராசு விசாரணையின் போதுதான் மொழிபெயர்ப்பாளரைக் கோரினார், செயல்முறைக்கு முழுவதும் அவர் சட்ட ஆலோசகரையே அணுகினார். இந்நிலையில், அவர் உரிய நடைமுறையைப் பெற்றுள்ளதாகவும், புதன்கிழமை அவரது மரண தண்டனையை திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தங்கராசுவின் சகோதரி லீலா சுப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது சகோதரர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அவரது வழக்கை ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும் என்று நான் நீதிமன்றத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல், பிரித்தானிய பில்லியனர் சர்.ரிச்சர்ட் பிரான்சன் இந்த மரண தண்டனையை நிறுத்தவும், வழக்கை மறுபரிசீலனை செய்யவும் சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com