இம்ரான் கானுக்கு ஒன்பது வழக்குகளில் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம்!
பிரபல கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பாகிஸ்தான் அரசியல் களத்தில் அவ்வப்போது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். இப்போது அவருக்கு எழுபது வயதாகிறது.
பாகிஸ்தானில் அவர் தலைவராக இருக்கும் அரசியல் கட்சியின் பெயர்: பாகிஸ்தான் தெரீக் எ இன்சாஃப். சுருக்கமாக பி.டி.ஐ. சில நாட்களுக்கு முன்பு, ஒரு வழக்கில் ஆஜராகும்படி லாகூர் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் பேரில் அவர் நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்.
நீதிமன்றத்தில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அவர் கீழே விழுந்துவிட்டார். அதனால் காலில் பலத்த அடி பட்டிருக்கிறது. “பாகிஸ்தானிய அரசாங்கம், ஒரு முன்னாள் பிரதமர் கோர்ட்டுக்கு வரும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால்தான், தலைவர் இம்ரான் கான் கீழே விழுந்து மீண்டும் அடிபட்டுக்கொள்ள நேர்ந்தது!” என்று அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாக, இம்ரான் பிரதமர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. எனவே, அவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி போராட்டத்தில் இறங்கினார். அதைத் தொடர்ந்து அவர் மீது நூற்றுக்கும் அதிகமான வழக்குகளை தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் போட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தக் கோரி அவர் போராட்டம் ஒன்றை நடத்தியபோது, இம்ரான்கான் சென்ற கான்வாய் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு காலில் பலத்த அடிபட்டது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது, மீண்டும் கீழே விழுந்ததில் நிலமை மோசமாகிவிட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குழு, குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு அவர் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானின் ஆளும் தரப்போ, “ இம்ரான்கான் நாடகமாடுகிறார். அவர் தன் மீது போடப்பட்டுள்ள கேஸ்களுக்காக அடிக்கடி கோர்ட்டுக்கு வரவேண்டி இருக்கிறது. கோர்ட்டுக்கு வருவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த ரெஸ்ட் நாடகம்” என்று விமர்சனம் செய்கிறார்கள்.
இதற்கிடையில் நேற்று (4 மே) இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தில் அவர் ஆஜரானார். இதற்கு முன்பு பல தருணங்களில் அவர் நேரில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக் காட்டி நீதிபதிகள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது, அவர் நேரில் ஆஜரானதை அடுத்து, ஒன்பது வழக்குகளில் பத்து நாட்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம். மேலும், இந்த பத்து நாட்களில், சம்மந்தப்பட்ட மாவட்ட கோர்ட்களில் ஆஜராகி, நிரந்தரமாக ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.