வடகொரியா
வடகொரியா

தென்கொரியாவை அச்சுறுத்திய ஏவுகணை சோதனை!

வடகொரியா 23 ஏவுகணைகள் சோதனை!

வடகொரியா நேற்று முன்தினம், தொடர்ச்சியாக 23 ஏவுகணைகளை செலுத்தி சோதனையில் ஈடுபட்டது. இதில், ஒன்று, தென் கொரிய கடல் எல்லையை ஒட்டி விழுந்ததால், வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இது தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியா, 1948ல் தனியாக பிரிந்தன. அதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது.

ஏவுகணை  சோதனை
ஏவுகணை சோதனை

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக வட கொரியா அணு ஆயுதங்கள் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு, வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 'இதற்கான விலையை அமெரிக்கா மற்றும் தென்கொரியா கொடுக்க வேண்டியிருக்கும்' என, வட கொரியா எச்சரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொடர்ச்சியாக, 23 ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய, குறுகிய ர ஏவுகணை சோதனைகள் நடந்தன. இதில், ஒரு ஏவுகணை, தென் கொரியா வின் எல்லையில் இருந்து, 26 கி.மீ., துாரத்தில் கடல் பகுதியில் விழுந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள தன் தீவுகளில், வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதாக தென் கொரியா எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. அங்குள்ள மக்கள், பதுங்கு குழிக்குள் பதுங்கினர். இந்த எச்சரிக்கை நேற்று காலையில் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வட கொரியா, 100க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளையும் கடல் பகுதியில் ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. சமீபத்தில், தென் கொரியத் தலைநகர் சியோலுக்கு அருகில் நடந்த விபத்தில், 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

தென்கொரியா இந்த சோகத்தில் இருக்கும் நிலையில், வட கொரியாவின் ஏவுகணை அதன் கடல் பகுதியில் விழுந்தது, அந்நாட்டிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபர் யான்சூக் இயோல் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, வட கொரியாவின் எல்லையை ஒட்டி, 26 கி.மீ. துாரத்தில் கடல் பகுதியில், தென் கொரியாவின் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

'வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எதையும் எதிர் கொள்ள தயாராக உள்ளோம்’ என, தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com