

ஆஸ்கர் விருதுபெற்ற ‘RRR’ திரைப்படத்தை திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறை பார்த்தவர்களே அதை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசையும் அடங்கவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் அந்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தினமும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வந்தவண்ணம் உள்ளன. எனினும் இதில் புதுமையாக தனது 7 வயது மகளுக்காக ஆர்ஆர்ஆர் படக்கதையை சுருக்கி புத்தகமாக தயாரித்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.
“ரோர் பை ஆர்ஆர்ஆர்” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான விடியோ வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் கதைச் சுருக்கம் படத்தின் கதாபாத்திரங்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் சிறிய புத்தகத்தில் ஜப்பானிய பெண் எளிமையாக ஜப்பானிய மொழியில் விவரித்துள்ளார்.
தமது 7 வயது குழந்தைக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை திரையரங்கில் சப்-டைட்டில்களுடன் மூன்று மணி அமர்ந்து பார்ப்பது கஷ்டமாக இருக்கும் என்பதால் இந்த புத்தகத்தை வடிவமைத்து தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விடியோவின் கீழ் “ஜப்பான் மொழியில் ஆர்ஆர்ஆர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடியோவை இதுவரை 6 லட்சம்பேர் பார்வையிட்டுள்ளனர். 70,000 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர்.
வாவ்… எங்கள் நாட்டையும், நாங்கள் தயாரித்த படத்தையும் விரும்பிய உங்களின் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள் என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்தை விரும்பி ரசித்து மகனுக்காக அதை புத்தகமாக வெளியிட்ட உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது செயல் எங்கள் மனதை தொடுகிறது. உங்களது செயல்பாடுகளால் எங்களுக்குத்தான் பெருமை என்று மூன்றாமவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அன்பின் வெளிப்பாடு என்று ஒருவரும், வாவ்… உங்கள் முயற்சி வெற்றிகரமாக அமைந்ததற்கு எங்கள் நன்றியும் பாராட்டுகளும். முடிந்தால் ஒரு புத்தகத்தை அனுப்பிவையுங்கள் என்று வேறுசிலரும் பதிவிட்டுள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர்., அலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் கீரவாணியின் இசையில் வரும் “நாட்டு நாட்டு” பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.