ராணி எலிசபெத் மரணம்: மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

ராணி எலிசபெத் மரணம்: மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் மறைந்து, அவரது மகன் சார்லஸ் மன்னராகப் கிரீடம் சூடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், லண்டனில் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ராணி எலிசபெத் இறந்ததும் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பத்து நாட்கள் நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் எட்டாம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான அவரது மரணம் தொடர்பான சடங்குகள் மற்றும் துக்கம் அனுசரிக்கப்பட்ட பத்து நாட்களுக்கான செலவு எவ்வளவு என்ற தகவலை பிரிட்டனின் நிதி அமைச்சகம் பொது வெளியில் தெரிவித்துள்ளது.

மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 1836 கோடி!

ராணி எலிசபெத்தின் உடல், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வெஸ்ட் மினிஸ்டெர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வந்து ராணிக்குத் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.

ஒரு ராணியின் மரணத்தால் பிரிட்டனுக்கு இவ்வளவு செலவா? என்ற முணுமுணுப்பும் அங்கே எழாமல் இல்லை.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த செலவு குறித்து ஓர் விளக்கம் அளித்திருக்கிறார். “நமது மகாராணியின் மரணம் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல; அது சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சோகமான சம்பவம் ஆகும். உலகமெங்கும் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களை மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் அது என்றால் சற்றும் மிகை இல்லை. அவருக்குத் தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்த விரும்பும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவர்களுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கடமை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல், அரசிக்கு மக்கள் இறுதி மரியாதை செலுத்தவும், முறைப்படி இறுதிச் சடங்குகள் நடந்தேறவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்களும் உரிய நடவடிக்கைகள் எடுத்தன. அதற்கான செலவுகள் தவிர்க்கமுடியாதவை” என்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மொத்த செலவான ரூபாய் 1836 கோடியில் பிரிட்டனின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள், போக்குவரத்துத் துறை என்று பல்வேறு தரப்பினரும் செய்த செலவுகள் அடக்கம்!

பிரிட்டனில் அரசி இருந்தாலும் சரி, மறைந்தாலும் சரி பெருஞ்செலவுதான் போலும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com