
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். மருத்துவ உலகில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்தது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இரண்டு அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்வதற்கு, மருத்துவ அதிகாரிகளின் கவனக் குறைவே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருமல் மருந்து விவகாரமே இன்னும் அடங்காத நிலையில், தரமற்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டில் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள மொரார் நகரில் அரசு மருத்துவமனை ஒன்றி இயங்கி வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
குழந்தையின் உடல் நலனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அசித்ரோமைசின் எனும் ஆன்டிபயாட்டிக் மருந்தை பரிந்துரைத்தனர். இதன்படி செவிலியர்கள் குழந்தைக்கு ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும் போது, அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து குழந்தையின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து அரசு மருத்துவமனை மருந்து ஆய்வாளர்களிடம் அவர் புகார் கொடுத்தார். குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கி ஆன்டிபயாட்டிக் மருந்தை கைப்பற்றினர். கொல்கத்தா மற்றும் போபாலில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக் கூடத்திற்கு ஆன்டிபயாட்டிக் மருந்தின் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அதோடு அரசு மருத்துவமனையில் 306 பாட்டில்களில் இருந்த மேற்படி மருந்துகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் சில மருந்துகளின் மாதிரிகளையும் சோதனை செய்ய வேண்டும் என ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் புழு, பூச்சிகள் எதுவும் தென்படவில்லை என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருந்துகள் அனைத்தும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு மருந்து நிறுவனம் தான் அசித்ரோமைசின் ஆன்டிபயாட்டிக் மருந்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளின் தரம் என்னவென்று இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் எனக் கூறப்படுகிறது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து 20 குழந்தைகளை பலி வாங்கிய நிலையில், ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் நெளிவது முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.