

அழகான முகத்தில் ஒரு சின்ன தழும்பு இருந்தாலும் நமக்கு எவ்வளவு கவலையாக இருக்கும்? அதைப் போக்க எத்தனையோ காஸ்ட்லி க்ரீம்களைத் தேடித் தேடி பூசுவோம்.
ஆனால், "வெறும் ரோஸ்மேரி இலை போதும், தழும்பே இல்லாமல் காயம் ஆறிவிடும்" என்று சொன்னால் நம்புவீர்களா?
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த அழகுக்குறிப்பு உண்மைதானா என்று சோதித்துப் பார்த்த விஞ்ஞானிகளே இப்போது ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்!
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு முக்கியக் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
சமையலுக்கும், வாசனை திரவியங்களுக்கும் பயன்படுத்தப்படும் ரோஸ்மேரி (Rosemary) இலைகளில், காயங்களை மந்திரம் போல ஆற்றும் சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.
விஞ்ஞானிகள் கண்டறிந்த ரகசியம் என்ன?
ரோஸ்மேரியில் 'கார்னோசிக் அமிலம்' (Carnosic acid) என்ற ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் மூலக்கூறு உள்ளது.
பொதுவாக நமக்குக் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தழும்புகள் (Scars) உருவாகும். ஆனால், இந்த கார்னோசிக் அமிலம் காயம்பட்ட இடத்தில் தழும்புகளை உருவாக்க விடாமல் தடுக்கிறது.
எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், ரோஸ்மேரி சத்து அடங்கிய மருந்தைப் பூசியபோது, காயம் ஆறியதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் மீண்டும் பழையபடியே ரோமக்கால்கள் (Hair follicles) மற்றும் எண்ணெய் சுரப்பிகள் வளர்வதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்தனர். அதாவது, வடுவே இல்லாமல் தோல் அதன் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய ஆராய்ச்சி!
இந்த மாபெரும் மருத்துவக் கண்டுபிடிப்பின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. இரண்டு கல்லூரி மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் பலர் "ரோஸ்மேரி ஆயில் சருமத்திற்கு நல்லது" என்று வீடியோ வெளியிடுவதைப் பார்த்தனர்.
"இது சும்மா இணையதள டிரெண்டா? இல்லை நிஜமாவே இதில் அறிவியல் இருக்கா?" என்ற அவர்களின் சந்தேகமே இந்த ஆய்வுக்கு வித்திட்டது.
அவர்கள் தோல் மருத்துவ நிபுணரான டாக்டர் தாமஸ் லியுங் என்பவருடன் இணைந்து நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
எதிர்காலத்தில், அதிக செலவில்லாத, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான காய மருந்துத் தயாரிப்பில் ரோஸ்மேரி முக்கியப் பங்கு வகிக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமையலறையில் இருக்கும் ஒரு சாதாரண இலைக்கு இவ்வளவு சக்தியா என மருத்துவ உலகமே வியந்து நிற்கிறது!