லண்டன் KFC உணவகத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த மாதேஷ் ரவிச்சந்திரன் என்பவர் தனது மேலாளருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.81 லட்சத்தை இழப்பீடாக பெற்றுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள KFC உணவகத்தில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாதேஷ் ரவிச்சந்திரன் என்பவர், தனது மேலாளர் ‘அடிமை’ போன்ற இழிவான வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாகவும், கூடுதல் நேரம் பணியாற்ற கட்டாயப்படுத்தியதாகவும், அவர் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் விடுப்பு மறுக்கப்பட்டதாகவும், இனரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அந்த KFC உணவகத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஜன் என்பவர் மேனேஜராக பணியாற்றி வந்தார்.இந்த உணவகத்தில் மாதேஷ் ரவிச்சந்திரன் உடன் இலங்கை தமிழர்களும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாதேஷ் ரவிச்சந்திரன் பணிக்கு சேர்ந்த நிலையில்,ஜூலை மாதம் மாதேஷ்க்கு கூடுதலாக பணிநேரம் வழங்கப்பட்டதுடன் விடுமுறை வழங்கவும் மறுக்கப்பட்டுள்ளது.
மாதேஷ் ரவிச்சந்திரனின் கோரிக்கையை மறுத்த மேலாளர் கஜன், இலங்கையை சேர்ந்த சக தமிழ் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாதேஷ் வேலையை நிற்பதாக கூற, முறைப்படி பணியில் இருந்து நின்றால் பணபலன், ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதால், நோட்டீஸ் பீரியட்டாக ஒரு வாரம் பணியாற்றியபோது மேனேஜர், அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதனால் மாதேஷ் அங்குள்ள தீர்ப்பாயத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி பால் அபோட், மாதேஷ் ரவிச்சந்திரனின் புகார்கள் உண்மையானவை என்றும், அவர் நேரடியாக இனபாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார். இந்தியர் என்பதாலேயே அவரது விடுப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழ் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேனேஜரின் இந்த நடத்தை, ஊழியரின் மரியாதையை சீர்குலைக்கும் வகையிலானது என்றும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார நோட்டீஸ் கூட மறுக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இதனால் அவர் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்றம் முடிவு செய்தது. இறுதியாக, மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு சம்பளம் உள்ளிட்ட தொகைகள் சேர்த்து மொத்தம் இந்திய மதிப்பில் சுமார் 81,22584 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.