கொல்கத்தா மாநகர் எங்கும், அங்காங்கே பளிச் என்ற மஞ்சள் நிற டாக்ஸிகள் காண்பவரின் கண்ணைக் கவரும். பல காலமாக மேற்கு வங்கத் தலைநகரின் ஒரு அடையாளமாக மாறி போயுள்ள இந்த டாக்ஸிகள் விரைவில் நிறுத்தப்பட உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் 1908ஆம் ஆண்டு கொல்கத்தாவில் டாக்ஸி போக்குவரத்துகள் துவங்கின. அப்போது ஒரு மைல் பயணத்திற்கு எட்டணா வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு கல்கத்தா டாக்ஸி அசோசியேஷன் மூலம் மஞ்சள் நிற அம்பாசிடர் டாக்ஸி போக்குவரத்து தொடங்கப்பட்டது. அம்பாசிடர் டாக்ஸியின் கம்பீரமான தோற்றம் அவற்றின் நம்பகத்தன்மை காரணமாக விரைவாக பிரபலமடைந்தது . அப்போதெல்லாம் சாலைகளின் ராஜாவாக இந்த அம்பாசிடர் கார்கள் இருந்தது. 2014 முதல், அம்பாசிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. வாகனங்களை பழுதுபார்க்கும் போது காரின் அசல் பாகங்கள் கிடைக்காமல் பழைய பாகங்களையே மேம்படுத்தி உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
2015 ஆம் ஆண்டிலிருந்து சில டாக்ஸி ஆப் (App) சேவைகள் சந்தையில் வந்ததிலிருந்து பாரம்பரிய டாக்ஸி சேவைகள் சிறிது சிறிதாக மங்க ஆரம்பித்தன. 2018 ஆம் ஆண்டில் 17000 எண்ணிக்கையில் இருந்த மஞ்சள் டாக்ஸிகள் தங்கள் கட்டணத்தை உயர்த்தினர். அதுவே அவர்கள் இறுதியாக கட்டணம் உயர்த்திய காலம் அதன் பின்னர் இன்று வரையிலும் டீசல் விலை , உதிரி பாகங்கள் விலை உயர்ந்த போதிலும் தங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை.
தேசிய சுற்றுச்சூழல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து தனியார் மற்றும் வணிக வாகனங்களையும் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து நிறுத்த உத்தரவிட்டுருந்தது. ஆனாலும், சில வருடங்களுக்கு முன்பு, 10,000 க்கும் குறைவான மஞ்சள் டாக்சிகள் 1500 ரூபாய் அபராதம் செலுத்தி வாகன சுகாதார சான்றிதழை (FC) பெற்று பயன்பாட்டில் இருந்தன. காலாவதியான டாக்சிகளை புதுப்பிக்கும் செலவு அதிகரித்ததால், பழைய வாகனத்தை சரி செய்து கொண்டே வருமானத்தை இழப்பதை விட புதிய BS -VI கார்களை வாங்குவது சிறந்ததாக இருந்தாலும், புதிய டாக்ஸிகளுக்கு பழைய கட்டண விகிதம் சரிவராது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், இரண்டு வருடங்கள், டாக்சிகள் எந்த வித பயணிகளும் இல்லாமல் காற்று வாங்கின. அந்த நேரத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் பலரும் மஞ்சள் டாக்ஸி தொழிலை விட்டு வெளியேறினார்கள். ஒரு புறம் வாகனத்தை பழுது நீக்கி FC சான்றிதழ் வாங்காமல் பலரும் டாக்ஸிகளை கிடப்பில் போட்டு விட்டனர்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொல்கத்தாவில் சுமார் 7,000 மஞ்சள் டாக்சிகள் இருந்தன. அதில் 4,493 வாகனங்கள் காலாவதி ஆகிவிட்டதால், அதன் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறது. மீதமுள்ள 2,500 மஞ்சள் நிற அம்பாசிடர் டாக்சிகள் அடுத்த ஆண்டு வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளன. அது காலாவதி ஆனதும் முற்றிலுமாக மஞ்சள் நிற டாக்ஸிகள் ஓய்வு பெறும்.
ஒரு காலத்தில் கொல்கத்தா நகரில் புகழ்பெற்ற மஞ்சள் டாக்சிகள், நகரின் தெருக்களில் இருந்து படிப்படியாக மறையும். கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றான மஞ்சள் நிற டாக்சிகளை இனி பார்க்க முடியாது. கொல்கத்தா நகரில் புகழ்பெற்ற டிராம் வாகன சேவை போல டாக்ஸிகளையும் இனி வரும் காலத்தில் பழைய திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். போக்குவரத்து சேவையில் ஒரு சகாப்தம் இறுதியை எட்டியது.