திருச்சியில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானம் ஒரே இடத்தில் வட்ட மடித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து நேற்றும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 11ம் தேதி மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா புறப்பட்ட இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் மக்கள் அவதிக்குள்ளாகினர். 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக இந்த விமானம் ரன் வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், சக்கரங்கள் உள்ளிழுக்கவில்லை. இதனை கவனித்த விமானிகள் உடனே விமான நிலைய கட்டுப்பாட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால், விமானிகள் விமானத்தை சுற்றிவட்டமிட தொடங்கினர். அதன்படி, மாலை 5.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை, விமானம் திருச்சி வான் எல்லைப்பகுதிகளில் வட்டமிடத் துவங்கியது. தகவலறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும், விமானிகள் மூலமே அப்பிரச்சினையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை.
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பத்திரமாக பயணிகளை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பயணிகளின் நிலை என்ன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனையடுத்து ஒருவழியாக இரவு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதே நேரத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளையும், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸார் உள்ளிட்டோர் செய்தனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இதில் இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நேற்று மாலையும் இதுபோல விமான கோளாறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5.40 மணியளவில் 148 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போதுதான் எலெக்ட்ரிக் கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பழுதை சீரமைக்கும் பணி நடந்த பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதை சரி செய்ய முடியாததால் நேரம் இழுத்தது. பயணிகளுக்கு 11.30 மணியளவில்தான் உணவு வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் கடுப்பாகினர். அதன்பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு இன்று காலை 2.45 மணியளவில் பயணிகள் ஷார்ஜாவுக்கு புறப்பட்டனர்.
இப்படி மீண்டும் மீண்டும் விமானங்களில் கோளாறு ஏற்படுவது பதற்றத்தை ஏற்படுத்துகிறது .