

நடப்புப் பருவத்தில் சம்பா மற்றும் தாளடி பயிரிடும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்யும் மையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர்பாராத வானிலை, பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற காரணங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகும்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை மற்றும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்ய, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் (Common Service Centers), பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmfby.gov.in மற்றும் "கிராப் இன்சூரன்ஸ்" (Crop Insurance) மொபைல் செயலி மூலமாகவும் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அல்லது அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கலாம்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் (2025-26) சம்பா பருவத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்யலாம்.
கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்யலாம்.
காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.540, மக்காச்சோளத்திற்கு ரூ.484, பருத்திக்கு ரூ.222 ஆகும். 15.11.2025-ந் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மதுரை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.