
நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறை அமலுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வணிகர்கள், வியாபாரிகள் உள்பட பலரும் ஜிஎஸ்டி வரியை பணமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி செலுத்துவதை மேலும் எளிமையாக்க யுபிஐ முறையில் வரி செலுத்த புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி (IDFC First Bank). இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக இருந்த இடத்திலேயே மொபைல் யுபிஐ மூலம் ஜிஎஸ்டி வரியைக் கட்டலாம்.
ஜிஎஸ்டி வரியைக் குறைக்க உள்ளதாக சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதை எளிதாக்கியுள்ளது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி.
இதுகுறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி வரியை செலுத்த அரசு அங்கீகரித்த தனியார் வங்கிகளில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியும் ஒன்று. வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறையை நாங்கள் மிகவும் எளிதாக்கி, யுபிஐ மூலமாக செலுத்த வழிவகை செய்துள்ளோம். நாடு முழுவதும் இருக்கும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கிக் கிளைகளில் காசோலை, டிடி அல்லது பணமாகவும் ஜிஎஸ்டி வரியை செலுத்தும் வசதி உள்ளது. இனி யுபிஐ மூலமும் ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்கள் செலுத்தலாம்.
மேலும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதை எளிதாக்க பதிவிறக்கம் செய்யக் கூடிய சவான்களும் வங்கி சார்பில் வழங்கப்படுகிறது. இதன்படி ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றம் (UPI), டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் வங்கி இணையதளத்தைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி வரியை செலுத்தலாம். வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர் அல்லாத நபர்களும் அதிகாரப்பூர்வ வங்கி இணையத்தின் மூலம் ஜிஎஸ்டி வரியை செலுத்தலாம்” என ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஜிஎஸ்டி வரியை யுபிஐ மூலம் செலுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக இருக்கும். அதே நேரத்தில் இதிலும் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதால், வாடிக்கையாளர்கள் அதிக கவனத்துடன் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும்.