
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தீபாவளிக்கு பட்டாசுகளின் விலை அதிகரிக்கும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்து நடந்ததே இதற்கு முக்கிய காரணம். தொடர் வெடி விபத்துகளைத் தவிர்க்க உயர்நீதிமன்றம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆய்வின் போது பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட 30% பட்டாசு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளின் விலை நிச்சயமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனை மோசடியால், பட்டாசு உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பட்டாசு உரிமையாளர்கள் ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க குரல் கொடுத்தனர். அரசிடம் முறையான அனுமதி பெறாமலும், ஜிஎஸ்டி வரி கட்டாமலும் ஆன்லைன் வர்த்தகங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும் ஆன்லைனில் பட்டாசு விற்பனை என்ற பெயரில் மோசடிகள் நடப்பதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவரான ராஜா சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பட்டாசு மோசடிகள் குறித்து விவாதிக்கவும், உரிமம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், “ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசும் ஆன்லைன் விற்பனையைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்வதைத் தவிர்த்து, நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து உரிமம் வழங்கிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது போலவே, ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சீனா பட்டாசுகளின் வருகையால் தமிழக பட்டாசு விற்பனை பாதிப்படைந்தது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகமும் பாரம்பரியம் மிக்க சிவகாசி பட்டாசுகளுக்கு போட்டியாக வந்திருப்பது பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணித்து, சிவகாசி பட்டாசுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.