

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து, தொலைதொடர்பு நிறுவனங்களும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அடுத்த 3-4 மாதங்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காகப் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. ஆனால் இந்த மூலதனச் செலவுகளை ஈடுகட்டவும், லாபத்தை ஈட்டவும் தற்போதைய கட்டணங்கள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்ட்ரம் இன்ஸ்டியூஷனல் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) வோடாஃபோன், ஐடியா உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் மொபைல் கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் விரிவாக்கம், நெட்வொர்க் முதலீடுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், கட்டண உயர்வு குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4G மற்றும் 5G சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நிர்வாக செலவுகள் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறுவதாலும், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் சேர்க்கையாலும், ஜூன் காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் காலாண்டு அடிப்படையில் 1 முதல் 1.5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் கட்டண உயர்வு திட்டம் அமல்படுத்தப்பட்டால் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்பெய்ட் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் மாதாந்திர செலவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த 15 சதவீத கட்டண உயர்வு நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தும் அதே வேளையில் சாமானிய மக்களின் மாதாந்திர மொபைல் ரீசார்ஜ் செலவை ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிக டேட்டா பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் குடும்பத் திட்டங்களை பயன்படுத்துபவர்கள் இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிகாம் சந்தை ஜியோ, ஏர்டெல், வோடபோன் என 3 தனியார் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே சுருங்கியுள்ளது. இதனால் நிறுவனங்கள் விலையை உயர்த்தும்போது வாடிக்கையாளர்களுக்கு பெரிய மாற்று வழிகள் மக்களுக்கு இல்லை. அப்படி மாற வேண்டும் என்றால் பிஎஸ்என்எல்லுக்குத்தான் மாற வேண்டும்.
தற்போதைய நிலையில் ஒரு வாடிக்கையாளர் ரூ.350 செலவு செய்தால் தான் ஒரு மாதம் செல்போனை இண்டர்நெட்டுடன் பயன்படுத்த முடியும். இண்டர்நெட் இல்லாத வாடிக்கையாளர்கள் கூட மாதந்தோறும் ரூ.200 ரீசார்ஜ்செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இன்கம்மிங் கால் கூட வராது.
இன்று பெரும்பாலான மக்கள் போஸ்ட் பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புடன் சேர்த்தே ஒடிடி சேவைகளையும் வாங்குகிறார்கள்.
அந்த வகையில் மாதம் குறைந்தது ரூ.1500 என்கிற அளவிற்கு இந்த இணைய சேவை மற்றும் தொலை தொடர்பு திட்டங்கள் உள்ளன. இரண்டு பேர் இருக்கும் குடும்பத்துக்கே இவ்வளவு செலவானால், நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்கள் மூலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல லட்சம் கோடி வருமானம் பார்க்கின்றன.
மறுபுறம் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு (Higher Value Plans) வாடிக்கையாளர்களை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள ஆய்வில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி திட்டங்களின் கட்டணங்களை 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஈர்த்து, தங்களது சந்தை பங்கீட்டைத் தொடர்ந்து அதிகரிக்கும்.
அதேவேளையில், காலாண்டு அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா வெறும் 2 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரபல சர்வதேச நிதி மற்றும் தரகு நிறுவனமான ‘நொமுரா’, டெலிகாம், நிறுவனங்கள் 15 சதவீத கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. இந்த பிரமாண்டமான மூலதனச் செலவுகளை ஈடுகட்டவும், லாபத்தை ஈட்டவும் தற்போதைய கட்டணங்கள் போதுமானதாக இல்லை. எனவேதான் இந்த கட்டண உயர்வுக்கு தயாராகி வருவதாக கூறியுள்ளது.
இந்த 15 சதவீதம் கட்டண சீரமைப்பு நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிகழலாம் என நொமுரா அமைப்பு தனது கணிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. லும் செல்போன், பிராட்பேண்ட் மற்றும் ஓ.டி.டி. உள்ளடக்கங்களை ஒன்றாக இணைத்து "பண்டில்" செய்து வழங்குவதால், கட்டணங்கள் உயர்ந்தாலும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கைவிட்டு மாறுவது பாதியாக குறையும் என்று நொமுரா அமைப்பு கணிப்பில் கூறியுள்ளது.
இதுவரை ஏர்டெல் அல்லது ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், தொலைத்தொடர்பு துறையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தற்போதைய ரீசார்ஜ் கட்டணங்களே நடைமுறையில் இருக்கும்.