உங்க குழந்தைகள் யூடியூப்-ல மூழ்கி கிடக்கிறதா..? இதோ கட்டுப்படுத்த புதிய வசதி அறிமுகம்...!
பாண்டி, பம்பரம், சோழி, தாயம், கில்லி என்று அந்த காலத்தில் குழந்தைகளுக்கு இருந்த பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம். முன்பெல்லாம் குழந்தைகள் லீவு நாட்களிலும், நேரம் கிடைக்கும் போதும் டிவி பார்ப்பார்கள் அல்லது வெளியில் சென்று நண்பர்களுடன் கிரிக்கெட், ஃபுட்பால், கண்ணாமூச்சி விளையாடுவார்கள். ஆனால் இன்று குழந்தைகள் வெளியில் சென்று ஓடியாடி விளையாடாமல் செல்போனிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் செல்போனில் வீடியோ கேம், ஷார்ட்ஸ், ரீல்ஸ் பார்ப்பது என பொழுதைக் கழிக்கிறார்கள். இன்றைய பெற்றோர் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்து விடுவதால் குழந்தைகளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனிலேயே நேரத்தை கழிக்கின்றனர்.
குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் யூடியூப் ஷார்ட்ஸின் (Youtube shorts) மாயப்பிடியில் சிக்கி, அதிக நேரம் செலவழிப்பதுடன், படிப்பு, விளையாட்டு, தூக்கம் என அனைத்தையும் புறக்கணித்து அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும், மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி இதிலிருந்து விடுவிப்பது என்று தெரியாமல் இருந்த நிலையில் அவர்களின் மன உளைச்சலில் போக்க, யூடியூப் ஒரு புதிய, அத்தியாவசிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது யூடியூப்பில் புதுப்பிக்கப்பட்ட 'Parental Controls' (பெற்றோர் கட்டுப்பாடுகள்) மூலம், குழந்தைகள் யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கும் நேரத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும். இந்தப் புதுப்பிப்பின் மூலம், டீனேஜர்களின் YouTube கணக்குகளை மேற்பார்வையிடும் பெற்றோர்கள் இப்போது ஷார்ட்ஸுக்கு குறிப்பாக தினசரி நேர வரம்பை நிர்ணயிக்கலாம்.
அதாவது Time Limit மூலம் ஒரு நாளில் குழந்தைகள் யூடியூப்பில் ஷார்ட்ஸ் பார்க்கும் நேரத்தை 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பெற்றோர்கள் செட் செய்ய முடியும். பெற்றோர் செட் செய்த Time Limit முடிந்ததும், ஷார்ட்ஸ் தானாகவே நின்றுவிடும். அதுமட்டுமில்லாமல் விரைவில், ஷார்ட்ஸ் பார்க்கும் வசதியை முழுமையாக முடக்கும் (Block Option) அம்சமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், "Take a Break" மற்றும் "Bedtime" போன்ற நினைவூட்டல்களையும் பெற்றோர்கள் செட் செய்யும் வசதியும் உள்ளது.
டீன்ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் யூடியூப்பில் புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கல்வி, அறிவியல், படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வமான வீடியோக்கள் மட்டுமே அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் அதேசமயம் தேவையற்ற, வயதுக்கு மீறிய உள்ளடக்கங்கள் வடிகட்டப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் யூடியூப் செயலியின் 'Family Center' பிரிவில் மாற்றங்களைச் செய்து தேவைக்கேற்ப, குறிப்பாக நாட்களில், Time Limitஐ மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது. யூடியூப்பில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, டிஜிட்டல் உலகில் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோருக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

