"கட்டுக்கட்டாகப் பணம்... ஆரவார ரீல்ஸ்!": 5 சவரன் நகை திருட்டில் சிக்கிய பிரபல யூடியூபர்!

"கட்டுக்கட்டாகப் பணம்... ஆரவார ரீல்ஸ்!": 5 சவரன் நகை திருட்டில் சிக்கிய பிரபல யூடியூபர்!
யூடியூபர் மதுமிதா
யூடியூபர் மதுமிதா
Updated on: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது 5 சவரன் நகையை திருடியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சை சென்றபோது பேச்சிமுத்துவிற்கு மதுமிதா அறிமுகமானதாகவும், இருவரும் காரில் ஒன்றாக சென்றபோது மதுமிதா நகைகளை திருடி சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமாரின் மனைவியும், சமூக வலைதளங்களில் பல லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபல யூடியூபருமான மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் கட்டுக்கட்டாகப் பணம், விதவிதமான ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுப் புகழ்பெற்ற இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.

கடந்த 24-ஆம் தேதி மதுமிதா தனது கணவருடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டுக் கதவை உடைத்து 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைக் கைது செய்தனர்.

போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுமிதா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவற்றின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் 5 சவரன் நகையை திருடியதாக நாகர்கோயிலை சேர்ந்த யூடியூபர் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது, யூடியூபர் மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காரில் இணைந்து பயணித்த தருணத்தில், பேச்சிமுத்துவுக்கு தெரியாமல் அவரது 5 சவரன் நகைகளை மதுமிதா திருடி சென்றதாக கூறப்படுகிறது.

அச்சமயத்தில் இதுகுறித்து வெளியில் கூறினால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என மதுமிதா மிரட்டியதால், பயந்துபோய் உடனடியாக புகார் அளிக்கவில்லை என்று பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். தற்போது தைரியமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளையடித்தவன் கைது... ஆனா இவங்க இன்னும் திருந்தவே இல்ல!
யூடியூபர் மதுமிதா
logo
Kalki Online
kalkionline.com