கொசுக்கள் மூலம் பரவும் நோய்களில் இந்த ஜிகா வைரஸ் நோயும் ஒன்று. தற்போது இந்தியாவில் அதிகளவு இந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் புனேவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இந்த ஜிகா வைரஸ் பரவியது. இதனையடுத்து இன்று கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உடலுறவு மூலமும் பரவக்கூடியது. ஒருவேளை இந்தத் தொற்று கர்ப்பிணி பெண்களுக்கு இருந்தால், வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் பரவுமாம். இந்த கொசுக்கள் பகலில் கடிக்கக்கூடியவை. அதேபோல ரத்த பரிமாற்றங்களின் வழியாகவும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவும்.
ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் வெளியில் தெரிவதே இல்லை. சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகள் வெளிப்படுகின்றன. அதாவது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண்கள் சிவந்து போதல், சருமத்தில் சிவப்பு நிறத் தடிப்புகள் அரிப்புடன் தோன்றும்.
ஜிகா வைரஸ் உள்ள பகுதிக்கு செல்லும் நிலையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். உடல் முழுவதும் மூடியபடி ஆடை அணியுங்கள். வீடு சுற்றி கொசு வராமல் தடுக்க கொசு வலை அணிவது பாதுகாப்பானது. ஜிகா வைரஸ் இருக்கும் இடங்களுக்கு சென்று வந்தால் மூன்று வாரம் வரை கொசு கடிக்காமல் பார்த்துகொள்ளவும். தொற்று இருக்கும் இடங்களுக்கு சென்று வந்தவர்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம். சில வாரங்கள் வரை காத்திருந்து அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கவனித்த பிறகு இரத்த தானம் அளிப்பது பாதுகாப்பானது.
கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்தால் அது நஞ்சுக்கொடி வழியாக கருவுக்கு சென்று குழந்தைக்கு பிறவி குறைபாட்டு நிலையை உண்டு செய்யலாம்.
அதனால் மற்றவர்களை காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். கர்ப்பமாக இருந்தால் ஜிகா வைரஸ் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத நிலையில் பயணம் சென்று வந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதும் ஜிகா வைரஸ் அறிகுறிகளை கண்காணிப்பதும் அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கும் இடத்தில் (அதாவது ஊரில்) இருந்தால் கொசுக்களை விரட்டும் வழிகளை முயற்சிப்பது சிறந்தது.