வட இந்தியாவின் டெல்லியை சுற்றியுள்ள நகரங்களில் சுற்றுச்சுழல் மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று டெல்லியில் இறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. ஒரு சில விமானங்கள் புகை மூட்டத்தால் தரை இறங்க முடியாமல் வானத்தில் மணிக்கணக்காக வட்டமடித்துக் கொண்டிருந்தன.
டெல்லியின் மோசமான காற்றுத் தரம் அங்குள்ள மக்களை முச்சடைக்க வைப்பதுடன், விமானம் மற்றும் தரை வழி போக்குவரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. கடுமையான புகை மூட்டம் எதிர் வரும் வாகனத்தையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு மிக மோசமான சூழலில் உள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் பல வட இந்திய நகரங்களின் நிலையும் இதே தான்.
இப்படிப் பட்ட சுற்று சூழலில் இந்தியாவின் சில நகரங்கள் சுத்தமான காற்றுத் தர நிலைகளைக் கொண்டுள்ளது. அவர்களை நினைத்து டெல்லி மக்கள் ஏங்கக் கூடும்.
டெல்லியின் காற்றின் தரம் மோசமாக இருப்பதால், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள் விடுமுறை விடப்படுகின்றன. அவர்கள் வீட்டில் இருந்து படிக்க ஆன்லைன் வகுப்புகளை கோருகின்றனர். ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய கோரிக்கைகளை நிறுவனங்களுக்கு வைக்கின்றனர்.
நவ18, 2024 அன்று டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு துவாரகா, நஜஃப்கர், ரோகினி, முண்டகா போன்ற பகுதிகளில் 1,500 ஐ தாண்டி (மோசமான) சாதனையை படைத்தது. இது காற்றுத் தரம் மோசமாக இருப்பதன் உச்சமாக கருதப்படுகிறது.
டெல்லியில் வசிப்பவர்கள் நல்ல காற்றை சுவாசிக்கக்கூடிய தூய்மையான நகரங்களில் வாழ ஏங்குகிறார்கள். தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தின் காற்றுத் தரம் 19 ஆகக் குறைவாக இருப்பது சுத்தமாக காற்றுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அதே நேரம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர் சுத்தமான காற்று தரத்தில் முதல் இடத்தில் உள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுக்க பல நகரங்களில் தூய்மையான காற்று கிடைக்கிறது. இவை மட்டுமல்லாமல் அரியலூர், பாகல்கோட் , சாமராஜநகர், சிக்கமளூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஹாசன், கல்புர்கி, காஞ்சிபுரம், கரூர், கொப்பல், திருச்சி, தஞ்சை, மடிகேரி போன்ற நகரங்கள் மக்கள் சுவாசிக்க நல்ல காற்றுத் தரத்தைக் கொண்டுள்ளன.
சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள 51 சிறிய மற்றும் பெரிய நகரங்களில் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது. இந்த நகரங்களில் பிரதாப்கர், பிரயாக்ராஜ், புதுச்சேரி, பூர்ணியா, ராம்நகர், ராணிப்பேட்டை, ரிஷிகேஷ், சட்னா, ஷிவமொக்கா, சில்சார், சிலிகுரி, சிரோஹி, ஷிவ்சாகர், திருப்பூர், வாரணாசி, வேலூர், விஜயவாடா மற்றும் பிற நகரங்கள் அடங்கும். தூய்மையான காற்றுள்ள நகரங்களின் பட்டியலில் தென்னிந்திய நகரங்களே அதிகளவில் உள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ்நாடு தூய்மையான காற்றுத் தரத்தில் நல்ல நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் நகரான கோவை கூட நல்ல காற்றுத் தரத்தை கொண்டுள்ளது. நல்ல காற்றை சுவாசிப்பதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்!