நிலமும் நீரும் எந்த அளவுக்கு மாசுபட்டு இருக்கிறதோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. பெருகிவரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் வெளியிடங்களில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் தற்போது நாம் வாழும் வீடுகளிலும் அதிகப்படியான காற்று மாசுபாட்டை உணர முடிகிறது. வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தை ஒரு வாரம் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அங்கே அதிகப்படியான தூசிகள் வந்து சேர்ந்து விடுகின்றன. எனவே நாம் வாழும் வீடுகளிலும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு, காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்
புதினா:
பொதுவாக புதினாவை வீடுகளில் சமையலுக்காக வளர்ப்பது தான் வழக்கம். ஆனால் புதினாவை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் காற்றை சுத்தப்படுத்த முடியும். வேகமாக வளரும் தன்மையுடைய புதினாவை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுவதோடு ஈக்கள், எலிகள், எறும்புகள் போன்றவற்றின் தொந்தரவுகளில் இருந்தும் விடுபட முடியும்.
எலுமிச்சைப்புல்:
Lemon Grass என்று அழைக்கப்படக்கூடிய எலுமிச்சை புல் என்ற தாவரத்தை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு மாசுக்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள சிட்ரல் எனும் வேதிப்பொருள் காற்றை சுத்தப்படுத்துவதோடு மனசோர்வை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதிகமாக வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் இந்த வகை தாவரங்கள் பயன்படுகிறது. கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு தாராளமாக இந்த வகை செடிகளை வீடுகளில் வளர்க்கலாம்.
பீஸ் லில்லி:
Peace Lily என்று அழைக்கப்படும் இந்த வகை தாவரம் பச்சை நிறத்தில் வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இதனை வீடுகளை வளர்க்கும் போது வீடுகளில் உள்ள பர்னிச்சர் மற்றும் மின்னணு பொருட்களில் உள்ள தூசிகளை கூட இது அதன் பெரிய இலைகளின் மூலம் உள் இழுத்துக்கொள்கிறது. இதனால் காற்றின் தரம் மேம்படுத்தப்படுகிறது. சிறந்த காற்று சுத்திகரிப்பானாக இந்த வகைச் செடிகளை நாசா குறிப்பிட்டுள்ளது.
மரூள்:
Snake Plant என்று அழைக்கப்படக்கூடிய மருள் எனப்படும் இந்த வகை செடிகள் காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மோனாக்சைடு, பென்சின், சைலின் உள்ளிட்ட 170 க்கும் அதிகமான காற்று மாசுபாடுகளை நீக்க உதவுகிறது. இந்த தாவரங்கள் இரவு முழுவதும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. எனவே இதனை படுக்கையறையில் கூட தாராளமாக வைத்து வளர்க்கலாம். தண்ணீர் இன்றி பல வாரங்கள் கூட வாழும் இந்த வகை தாவரங்கள் சுத்தமான காற்றை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
மணி பிளான்ட்:
நம் வீடுகளில் வளர்க்கப்படும் பல்வேறு வகையான செடி வகைகளில் மணி பிளான்ட்டும் ஒன்று. பொதுவாக இந்த வகை தாவரத்தை அதிர்ஷ்டத்திற்காகவே பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பர். ஆனால் இதனை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி சுத்தமான காற்று சுவாசிக்க முடியும். இந்த வகை தாவரம் வளர்வதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் தேவையில்லை. தொங்கும் செடிகளிலோ அல்லது சிறிய வகை தொட்டிகளிலோ கூட இதனை எளிதில் வளர்க்க முடியும்
ஸ்பைடர் பிளான்ட்:
ஸ்பைடர் பிளான்ட் என்று அழைக்கப்படும் இந்த வகை தாவரங்கள் தரையில் பற்றி வளரும் தன்மை உடையவை. மேலும் இவற்றை தொங்கும் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். இதுவும் அதிக அளவிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்து காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது.
ஜேட் பிளான்ட்:
Jade Plant என்று அழைக்கப்படும் இந்த வகை தாவரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றை நன்கு சூரிய ஒளி படக்கூடிய இடங்களில் வைத்து வளர்க்கலாம். மிதமான ஈரப்பதத்தில் இவ்வகை தாவரங்கள் செழித்து வளரும்.
இந்த வகை தாவரங்களை வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் வைத்து வளர்க்கலாம். இதன் மூலம் வீடுகளில் உள்ள காற்று மாசுபாட்டை குறைத்து சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். பொதுவாக தாவரங்கள் பகலில் ஆக்சிஜனை அதிகமாக வெளியிட்டு இரவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். ஆனால் இந்த வகை தாவரங்கள் மட்டும் இரவிலும் அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை வாய்ந்தவை. எனவே தான் இவை மிகச் சிறந்த காற்று சுத்திகரிப்பான்களாக பயன்படுகிறது.