ஆண் பெண் இருபாலரும் சமம் என்ற அடிப்படையில், அரசு பள்ளிகளில் இருந்து உயர்கல்வி செல்லும் பெண்களின் சேர்க்கையை அதிகப்படுத்த கொண்டுவரப்பட்ட 'புதுமைப்பெண்' திட்டத்தை போல் இனி ஆண்களுக்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெண்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் அவர்களின் மேற்படிப்பை தொடர முடியாமல் போவதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. யுஜி பட்டப்படிப்பு/ டிப்ளமோ/ ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாணவிகளுக்கான ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அதைபோல், 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 'புதுமைப்பெண்' திட்டத்தை போல் மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்படி, 6 -ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என அவர்களது கல்வியை மேம்படுத்த உதவி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அந்த வகையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், "மாணவிகளுக்கு 'புதுமைப்பெண்' திட்டம் போல் இனிமாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டம் தொடங்கப்பட உள்ளது. மேலும் வரும் நாட்களில் இன்னும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுத்த உள்ளோம்." என்று அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.