லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளாவில் மொத்தமாகவுள்ள 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வயநாடும் ஒரு முக்கிய தொகுதியாகும்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற தொகுதியிலும் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தாலும் வயநாடு தொகுதியில் அபாரமாக வெற்றிபெற்றார். இதனால்தான் இம்முறையும் ராகுல் வயநாட்டில் களமிறங்கவுள்ளார். இன்று ஒரு பேரணியாகச் சென்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த பேரணியில் ராகுலின் சகோதரி மற்றும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்துக்கொண்டார்.
வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா களமிறங்கவுள்ளார். ஆகையால் வயநாட்டில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. தற்போது கேரளாவில் எல்டிஎஃப் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. அதேபோல் சிபிஐ இரண்டாவது கட்சியாக உள்ளது. இங்கு எப்போதும் காங்கிரஸ் மற்றும் சிபிஐக்கும் தான் சரியான போட்டியாக இருக்கும்.
இதனால் சிபிஐ கட்சி ராகுலுக்கு எதிராகப் பேசியுள்ளது, “காங்கிரஸ் பாஜகவைதான் எதிர்க்கிறது என்றால் எதற்காக மத்திய பிரதேசத்திலோ, உத்தர பிரதேசத்திலோ அல்லது குஜராத்திலோ போட்டியிடவில்லை? ஏன் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கும் கேரளாவில் காங்கிரஸ் போட்டியிடுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கேரளாவில் பாஜக இல்லையென்பதால் ராகுல் யாருக்கு எதிராகப் பேசப்போகிறார் என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறது, சிபிஐ கட்சி. ஆகையால் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.