0,00 INR

No products in the cart.

​பிரணவத்தின் பொருளுரைத்த பெருமான்!

நெய்வாசல் நெடுஞ்செழியன்

திருவிளையாடல்களின் தலைவன் சிவபெருமான். அந்தத் திருவிளையாடல்களுக்கு பார்வதி தேவியும் விலக்கில்லை என்பதற்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியுர் அருள்மிகு பூங்கொடிநாயகி சமேத பிரணவபுரீஸ்வரர் திருக்கோயில்.

முன்னொரு காலத்தில் கயிலாயத்தில் சிவபெருமான் பூத கணங்களின் வேண்டுகோளுக்கிணங்க காரணம், காரியம், ஸ்தூலம், சூட்சுமம், முக்தி எனப்படும் ஐந்து பஞ்சாட்சரங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். முக்தி பஞ்சாட்சரத்தின் பொருளை உபதேசிக்கும் காலத்தில், பார்வதி தேவி அதைக் கேட்க நாட்டமில்லாது இருக்கவே, வெகுண்டெழுந்த சிவன், ‘பூலோகத்தில் மானுடராய் பிறக்கக் கடவது’ என சாபமிட்டார். தவறை உணர்ந்த தேவி, சாப விமோசனத்திற்கு வழி கூறுமாறு வேண்ட, ‘என்னை நினைத்து தவமியற்றி, மீண்டும் என்னை வந்து சேர்வாயாக’ என வரமருளினார் ஈசன்.

அதன்படி ஓமாம்புலியூர் என்னும் பதியில் பெண்ணாக அவதரித்த தேவி, இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டதுடன், பத்ரகாரண்யம் எனப்படும் இலந்தை மரக்காடாக இருந்த இவ்வூரில் முன்னோர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டு வரலானார். அவரை அடியொற்றி பலரும் வணங்க, ஊரெங்கும் ஹோமப்புகை நிரம்பியதுடன் கயிலாயத்திலிருந்த சிவனின் ஞானக்கண்ணிலும் பட்டது.

தேவியை ஆட்கொள்ளும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சிவன், மலைமகள் வணங்கிய லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பிரணவத்தின் உட்பொருளை தேவிக்கு உரைத்து அவரை ஆட்கொண்டதுடன், சிவசக்தி சமேதராய் காட்சியளிக்கவும் செய்தார். இறை தரிசனம் காணப்பெற்றவர்கள் அங்கே ஒரு ஆலயம் அமைத்து பிரணவத்தின் பொருளுரைத்த பெருமானுக்கு, ‘பிரணவபுரீஸ்வரர்’ எனப் பெயரிட்டனர்.

வேத மந்திரங்கள் ஓ(ஹோ)மங்கள் மூலம் இறைவியுடன் மற்றோரும் இறை தரிசனத்தைப் பெற்ற வரலாற்றின் அடிப்படையில் இவ்வூரை, ‘ஓமாம்புலியூர்’ என அப்பர் தம் தேவாரத்திலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்பொருளை இறைவன் உபதேசிக்க, அதை, ‘ஆம்’ போட்டு இறைவி கேட்ட வரலாற்றின் அடிப்படையில் இவ்வூரை, ‘ஓம் ஆம்புலியூர்’ என திருஞானசம்பந்தர் தம் தேவாரத்திலும் குறிப்பிட்டுள்ளார். இப்படி சிவனே குருவாகத் தோன்றி பிரணவத்தின் பொருளுரைத்ததால், இது குரு தலமாகவும் போற்றப்படுகின்றது.

காசிவராத்திரி அன்று வேட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேடன் ஒருவனை புலியொன்று துரத்த, அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். இரவு வந்தது உறக்கமும் வந்தது. உறக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவோமோ என்ற பயத்தில் உறங்காமலிருக்க, தான் அமர்ந்திருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் பறித்து கீழே போட்டான். அப்படி அவனால் போடப்பட்ட இலைகள் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அர்ச்சனையாய் விழுந்தது. நான்கு ஜாமங்களும் உறங்காது பூஜை செய்த வேடனுக்கும் அவனைப் பிடிப்பதற்காக மரத்தோடு சேர்த்து தன்னையும் சுற்றிவந்த புலிக்கும் சிவப்பேறு அளித்ததான வரலாறு இவ்வாலயத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

பிற்காலத்தில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாதர் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க ஆர்வம் கொண்டு இவ்வூர் வழியே வந்தபோது பொழுது சாய்ந்துவிடவே, ’ ‘இன்றைக்கு உன் தரிசனம் கிட்டாதா?’ என்று மனத்துயரை வெளிப்படுத்த, சிவபெருமான் அசரீரியாக, ‘இத்தலத்திலுள்ள எம்மை பூஜித்தால் சிதம்பர தரிசனத்தை இங்கேயே யாம் அருள்வோம்’ எனக் கூறினார். வியாக்ரபாதர் சற்றும் தாமதியாமல் பிரவணபுரீஸ்வரரை வழிபட, இறைவன் வியாக்ரபாதருக்கு நடராஜ மூர்த்தியாகக் காட்சியளித்தார். அத்திருவுருவை இவ்வாலயத்தின் தெற்குபுறத்தில் கற்சிலையாகக் காணலாம். பெரும்பாலான சிவாலயங்களில் நடராஜரின் திருமேனி பஞ்சலோகத்தால் ஆனதாகவே இருக்கும். விதிவிலக்காக கற்சிலையாக அவர் அருள்பாலிக்கும் ஒரேயொரு திருக்கோயில் இது மட்டுமேயாகும்.

இறைவன் பிரணவத்தின் பொருளுரைத்ததால் பிரணவபுரீஸ்வரர் என்றும், வியாக்ரபாதருக்குக் காட்சி தந்ததால் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என்றும், தொழுநோயால் பாதிக்கப்பட்டு தன்னை நாடி வந்த சதாநந்தன் என்ற அரசனுக்கு குணமளித்ததால், துயர்தீர்த்தநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் ஸ்ரீபுஷ்பலதாம்பிகை என்னும் பூங்கொடி நாயகியாவார். தல தீர்த்தம் கௌரி தீர்த்தம்.

காமண்டபத்தைக் கடந்து, அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் இருவரும் காவல் செய்ய, கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையார் மீது சுவாமி அருள்பாலிக்கிறார். சதுர வடிவ பீடத்தில் இடம்பெற்றள்ளதால் ஏழு வகை லிங்கங்களில் இது, ‘ஆர்ஷம்’ வகை லிங்கமாகும். மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்படும் லிங்கமே ‘ஆர்ஷம்’ எனப்படும்.

அர்த்த மண்டபத்தில் அனைத்து சுவாமிகளின் செப்புத்திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் வழக்கமாக நடராஜர் இடம்பெற்றிருக்கும் சபையில் தேவிக்கு பிரணவத்தின் பொருளுரைத்த சிவன் குருவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். எங்கும் காணக்கிடைக்காத காட்சி இது. குருவை வணங்கி வெளியே வர, தெற்கு நோக்கிய பெரிய திருமேனியுடன் புஷ்பலதாம்பிகை என்னும் பூங்கொடிநாயகி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. மகாமண்டபத்தில் இக்கோயிலின் ஐதீகச் சிறப்பை விளக்கும் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

அமைவிடம் : கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலிலிருந்து ஏழு கி.மீ. தெற்காக கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் ஊருக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. காட்டுமன்னார்கோயிலிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சூல வடிவில் துர்கை!

0
- டி.எம்.இரத்தினவேல் உத்தர்கண்ட் மாநிலத்தின் இயற்கையெழில் சூழ்ந்த பசுமையான பகுதி உத்தரகாசி. இத்திருத்தலத்தில் பாயும் புண்ணிய நதியான பாகீரதி நதிக்கரையில் அற்புதமாக அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில். தேவபுரி, தேவபூமி என புராணங்கள்...

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!

0
- எஸ்.ஸ்ருதி சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் புரிந்து கன்மத்தை அழித்தார்....

மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!

0
- இரா.சுரேஷ் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில். தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் அருள்மிகு ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி ஆலயம், நீலமேகப் பெருமாள் ஆலயம் மற்றும் மணிக்குன்ற பெருமாள் ஆலயம்...

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

0
- பழங்காமூர் மோ கணேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம். அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ‘தென்னூர் கைம்மைத் திருச்சுழி...

கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!

0
- லதானந்த் ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்...