பேப்பரை பிரிண்ட் பண்ற மாதிரி மனுஷ தோலையும் பிரிண்ட் பண்ணலாமா? அமெரிக்க ராணுவத்தின் அதிரடி கண்டுபிடிப்பு!

3D bio-printer
3D bio-printer
Published on

பொதுவாக "பிரிண்டர்" என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது காகிதமும், மையும் தான். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ டாக்குமெண்டுகளை பிரிண்ட் செய்யத்தான் நாம் இதைப் பயன்படுத்துவோம். ஆனால், இதே பிரிண்டரை வைத்து மனிதத் தோலையே உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்புவீங்களா? 

இது ஏதோ ஹாலிவுட் சயின்ஸ்-ஃபிக்ஷன் படக்கதை என்று நினைக்க வேண்டாம். போர்க்களத்தில் உயிருக்குப் போராடும் வீரர்களைக் காப்பாற்ற, அமெரிக்க ராணுவம் கையில் எடுத்திருக்கும் நிஜமான, அதிநவீன தொழில்நுட்பம் இது. அது எப்படிச் சாத்தியம்? 

அது என்ன 'பயோ-பிரிண்டிங்'?

நாம் பயன்படுத்தும் சாதாரண பிரிண்டரில் கலர் கலராக மை ஊற்றுவோம். ஆனால், இந்த '3D பயோ-பிரிண்டர்'களில் மை-க்கு பதிலாக, உயிருள்ள செல்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய 'பயோ-இங்க்' பயன்படுத்தப்படுகிறது.

ஹவாய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜேசன் பார்ன்ஹில் மற்றும் ராணுவ ஆராய்ச்சியாளர் பிரிசில்லா லீ ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் இந்த உயிருள்ள பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு, மனிதத் தோலை அச்சு அசலாக ஒரு பிரிண்ட் அவுட் போல உருவாக்குகிறார்கள்.

போர்க்களத்தில் இது எப்படி உயிரைக் காக்கும்?

போர்முனையில் குண்டு வெடிப்புகளிலோ அல்லது தீ விபத்துகளிலோ சிக்கும் ராணுவ வீரர்களுக்கு, தோல் சிதைவுறுவதுதான் பெரிய ஆபத்து. அந்த நேரத்தில் உடனடி அறுவை சிகிச்சை செய்வது கடினம். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், காயம்பட்ட வீரர்களுக்குத் தேவையான தோலை அங்கேயே உருவாக்கி, உடனடியாகப் பொருத்த முடியும்.

வெறும் காயங்களுக்கு மட்டுமல்ல, எதிரிகள் வீசும் விஷவாயுக்கள் அல்லது ரசாயனத் தாக்குதல்களால் தோல் பாதிக்கப்பட்டாலும், அதைச் சரிசெய்ய இது உதவும். மேலும், சில மோசமான பாக்டீரியாத் தொற்றுகளுக்கு மருந்துகள் வேலை செய்யாதபோது, பாதிக்கப்பட்ட தோலை நீக்கிவிட்டு, இந்தப் புதிய தோலைப் பொருத்தி உயிரைக் காப்பாற்றலாம்.

இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு பெரிய புரட்சியே வெடிக்கும். அதாவது, ஒரு நோயாளியின் சொந்த செல்களை வைத்தே, அவருக்குத் தேவையான இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை ஆய்வகத்திலேயே வளர்த்துவிட முடியும். இப்படிச் செய்வதால், மாற்று உறுப்புக்காகப் பல வருடம் காத்திருக்க வேண்டிய அவசியமோ, உடல் அந்தப் புதிய உறுப்பை ஏற்க மறுக்கும் அபாயமோ இருக்காது.

இதையும் படியுங்கள்:
செத்த பிறகும் முடி வளருமா? அறிவியல் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!
3D bio-printer

அறிவியல் வளர்ச்சி என்பது மனித குலத்தின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இன்று ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்படும் இந்த '3D பயோ-பிரிண்டிங்' தொழில்நுட்பம், நாளை சாதாரண மக்களுக்கும் பயன்பட்டு, பல உயிர்களைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்பலாம். காயங்களுக்கு மருந்து போடும் காலம் போய், காயத்தையே 'பிரிண்ட்' செய்து சரிப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com